பீஹார் வாக்காளர் பட்டியல்; வெளிநாட்டினர் ஏராளம் பேர் இருப்பதாக தேர்தல் கமிஷன் தகவல்

புதுடில்லி: பீஹார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணியின் போது தேர்தல் கமிஷன் அதிகாரிகள் வீடு வீடாக மேற்கொண்ட கள ஆய்வில், வங்கதேசம், நேபாளம், மியான்மரை சேர்ந்த மக்கள் அதிக அளவில் வசித்து வருவது அடையாளம் காணப்பட்டு உள்ளது.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபைக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்கவுள்ளது. இதையடுத்து, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை தலைமை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதன் விசாரணை நீதிபதிகள் சுதான்ஷு துலியா, ஜோய்மாலியா பக்ஷி அமர்வு விசாரணைக்கு வந்தது.
தலைமை தேர்தல் கமிஷன் நடத்தி வரும் வாக்காளர் தீவிர திருத்தப் பணிகளுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இந்த சரிபார்ப்பு பணியின்போது ஆதார், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் அட்டைகளையும் உரிய ஆவணமாக கருத்தில் கொள்ளும்படி தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரைத்தது.
இந்நிலையில், வாக்காளர் திருத்த பட்டியலை தயார் செய்யும் பணியில் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த விசாரணை உரிய முறையில் ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் நடத்தப்படும். வரும் செப்டம்பர் 30ம் தேதி இறுதி வாக்காளர் திருத்தப் பட்டியல் வெளியிடப்படும். சட்டவிரோத குடியேறிகளின் பெயர்கள் சேர்க்கப்படாது என தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.









