தெலங்கானா எம்எல்சி அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் காயம்

ஹைதராபாத்: எம்.எல்.சி., கவிதா குறித்து எம்.எல்.சி., சிந்தபண்டு நவீன் குமாரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலங்கானா ஜாக்ருதி அமைப்பினர் அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, நவீன்குமாரின் பாதுகாப்பு வீரர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


எம்.எல்.சி., சிந்தபண்டு நவீன் குமார் அண்மையில் நடந்த கூட்டத்தில் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் எம்.எல்.சி.,யும், தெலங்கானா ஜாக்ருதி அமைப்பின் நிறுவனருமான கவிதா குறித்து சர்ச்சை கருத்துக்களை கூறினார்.


அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலங்கானா ஜாக்ருதி அமைப்பின் தொண்டர்கள் நவீன்குமாரின் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும், அவரது அலுவலகத்தை சூறையாடினர். அப்போது, நவீன்குமாரின் பாதுகாவலர் திடீரென வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.


இதில், கவிதாவின் ஆதரவாளர் ஒருவர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், புகார் அளித்தால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Advertisement