சுகாதார நிலையத்தை மேம்படுத்துவதில் அலட்சியம் மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் மக்கள் குற்றச்சாட்டு

தாம்பரம்:மேற்கு தாம்பரம், ரங்க நாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஒன்பது ஆண்டுகள் ஆகியும், பிரசவ வார்டு அமைக்கப்படாமலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம், சோலார் போன்றவை பயனற்று கிடப்பதாகவும், அப்பகுதி மக்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.

தாம்பரம் மாநகராட்சி, 50வது வார்டு, ரங்கநாதபுரத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.

ரங்கநாதபுரம், கடப்பேரி, கஸ்துாரி பாய் நகர், மேற்கு தாம்பரம், புலிக்கொரடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, தினசரி 300க்கும் மேற்பட்டோர் பல்வேறு சிகிச்சைகளுக்காக வந்து செல்கின்றனர்.

சிரமம்



கர்ப்பிணியர் எண்ணிக்கை அதிகம். இங்கு, பொது, மகப்பேறு, குழந்தை நலன், கண், பல், தோல், முடநீக்கு இயல், மன நலம் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அதற்கான மருத்துவர்கள், வாரந்தோறும் சுழற்சி முறையில் வந்து செல்கின்றனர்.

பழமையான இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அதிகமாக வரும் கர்ப்பிணியர், பிரசவ நேரத்தில் குரோம்பேட்டை அல்லது எழும்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர். அதனால், ஏழை மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

ஏழை மக்களின் வசதிக்காக, இங்கேயே தாய் - சேய் மருத்துவமனை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, 2016ல், சின்னையா அமைச்சராக இருந்த போது, 15 லட்சம் ரூபாய் செலவில் தாய் - சேய் நல பிரிவுக்கு கட்டடம் கட்டப்பட்டு, திறக்கப்பட்டது.

அந்த கட்டடத்தில், 15 படுக்கைகள், அறுவை சிகிச்சை அரங்கம் உள்ளிட்ட வசதிகளுடன் பிரசவ வார்டு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஒன்பது ஆண்டுகள் ஆகியும் இதுவரை பிரசவ வார்டு அமைக்கப்படவில்லை.

வழக்கம் போல், கர்ப்பிணியர், பிரசவ நேரத்தில் குரோம்பேட்டை, எழும்பூருக்கு அனுப்பப்படுகின்றனர். அதேபோல், இக்கட்டடத்தில் சோலார் வசதியும் அமைக்கப்பட்டது. அதுவும் செயல்படவே இல்லை. மொட்டை மாடியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் கட்டப்பட்டது. அதுவும், பயனற்று கிடக்கிறது.

கோரிக்கை



மொத்தத்தில், இம்மருத்துவமனையை மேம்படுத்த அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை. அதேபோல், 10 ஆண்டுகள் ஆகியும் வர்ணம் தீட்டாமல் அப்படியே வைத்துள்ளனர்.

எனவே, மாநகராட்சி கமிஷனர் மருத்துவமனையை நேரில் ஆய்வு செய்து, பயன்பாடின்றி கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு மையம் மற்றும் சோலார் இயங்க நடவடிக்கை எடுப்பதோடு, கர்ப்பிணியர் வசதிக்காக, பிரசவ வார்டு அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து, முன்னாள் நகராட்சி கவுன்சிலர் எம்.கே.நாகூர்கனி, 63, கூறியதாவது:

இந்த ஆரம்ப சுகாதார நிலையம் பழமையானது மட்டுமின்றி, அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். பிரசவ வார்டு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம், சோலார் ஆகியவை, அ.தி.மு.க., ஆட்சியின் போது கட்டப்பட்டவை என்ற ஒரே காரணத்திற்காக, அவற்றை அப்படியே விட்டு விட்டனர்.

பழுதை சரிசெய்வதாக கூறி, ஆறு குளிர்சாதன பெட்டிகளை கழற்றி சென்றனர். இன்று வரை அதை மாட்டவே இல்லை. அதேபோல், இந்த கட்டடத்திற்கு வர்ணம் பூசி, 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

மற்றொரு புறம், இன்வெட்டர், ஜெனரேட்டர் வசதி இல்லாததால், மின்தடை ஏற்படும் போது, நோயாளிகள், ஊழியர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பிரசவ வார்டு இல்லாததால், கர்ப்பிணியர் பல கி.மீ., துாரம் உள்ள குரோம்பேட்டை, எழும்பூருக்கு செல்ல வேண்டியுள்ளது.

மாநகராட்சி கமிஷனராக அழகுமீனா இருந்த போது, இந்த கட்டடத்தை நேரில் ஆய்வு செய்து, தேவையான வசதிகளை செய்து கொடுப்பதாக உறுதியளித்தார். ஆனால், இன்றுவரை அப்படியே தான் உள்ளது. தற்போதைய கமிஷனர், நேரில் ஆய்வு செய்து, மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement