பீஹாரில் மீண்டும் அதிர்ச்சி; ஒரே வாரத்தில் 2வது பா.ஜ., தலைவர் சுட்டுக் கொலை

1

பாட்னா: பீஹார் தலைநகர் பாட்னாவில் பா.ஜ., தலைவர் சுரேந்திர கேவத்(52) மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த ஒரு வாரத்தில் 2வது பா.ஜ., தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் இதுவாகும்.


@1brபீஹாரில், கடந்த ஜூலை 6ம் தேதி, தலைநகர் பாட்னாவில் காந்தி மைதான் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட, 'ட்வின் டவர்' பகுதியில், பிரபல தொழிலதிபரும், பா.ஜ., பிரமுகருமான கோபால் கெம்கா, வீட்டு வாசலில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.


இந்நிலையில், தற்போது பாட்னாவில் பா. ஜ. தலைவர் சுரேந்திர கேவத் (52) சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார். பைக்கில் வந்த இருவர், 4 முறை சுட்டதில் படுகாயமடைந்த கேவத், பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.


பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. குடும்பத்தினரிடமிருந்து புகார் கிடைத்த பிறகு எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும். விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். கடந்த ஒரு வாரத்தில் இரண்டு பா.ஜ., தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.


கடந்த ஜூலை 6ம் தேதி பா.ஜ., தலைவர் கோபால் கெம்கா என்பவரும் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். பீஹார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:


இப்போது, பாட்னாவில் ஒரு பா.ஜ., தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார். என்ன சொல்வது, யாரிடம் சொல்வது? தே.ஜ., கூட்டணி அரசில் யாராவது உண்மையைக் கேட்கவோ அல்லது தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்ளவோ தயாராக இருக்கிறார்களா? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

பீஹாரில் வெவ்வேறு இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த சம்பவத்தில், 4 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement