புதிய சாம்பியன் சின்னர் * விம்பிள்டன் டென்னிசில்...

லண்டன்: லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில், முதன் முறையாக பைனலுக்கு முன்னேறிய, முதன் முறையாக பைனலுக்கு முன்னேறிய, உலகின் 'நம்பர்-1' இத்தாலியின் ஜானிக் சின்னர் 23, கடந்த இரு முறை கோப்பை வென்ற 'நம்பர்-2' ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 22, மோதினர். முதல் செட்டை அல்காரஸ் 6-4 என வென்றார். அடுத்த இரு செட்டை சின்னர் 6-4, 6-4 என வசப்படுத்தினார். நான்காவது செட்டில் 5-3 என முன்னிலை பெற்றார் சின்னர். தொடர்ந்து அசத்திய இவர், 6-4 என கைப்பற்றினார்.
3 மணி நேரம், 6 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சின்னர் 4-6, 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, விம்பிள்டனில் முதல் கோப்பை வென்றார். தவிர, சமீபத்திய (ஜூன் 8) பிரெஞ்ச் ஓபன் பைனலில் (2025) அல்காரசிடம் அடைந்த தோல்விக்கு, பதிலடி தந்தார் சின்னர். இவருக்கு ரூ. 35 கோடி பரிசு கிடைத்தது.
இதையடுத்து, விம்பிள்டனில் தொடர்ந்து 20, ஏ.டி.பி., ஒற்றையர் அரங்கில் தொடர்ந்து 24 என அசத்திய அல்காரசின் வெற்றி நடை முடிவுக்கு வந்தது. இவருக்கு ரூ. 17 கோடி பரிசு வழங்கப்பட்டது.
மியா அபாரம்
ஜூனியர் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் சுலோவாகியாவின் 16 வயது, மியா போஹன்கோவா, அமெரிக்காவின் ஜூலியெட்டா பரேஜா மோதினர். முதல் செட்டை 6-3 என வென்ற போஹன்கோவா, அடுத்த செட்டையும் 6-1 என எளிதாக வசப்படுத்தினார்.
ஒரு மணி நேரம், 8 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் போஹன்கோவா, 6-3, 6-1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பை கைப்பற்றினார்.
ஆண்கள் இரட்டையர் பைனலில் பிரிட்டனின் ஜூலியன் காஸ், கிளாஸ்பூல் ஜோடி, 6-2, 7-6 என்ற நேர் செட்டில் ஆஸ்திரேலியாவின் ரின்கி, நெதர்லாந்தின் டேவிட் பெல் ஜோடியை சாய்த்து கோப்பை வென்றது.
பெண்கள் இரட்டையர் பைனலில் தைவானின் சு வெய், லாட்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ ஜோடி, ரஷ்யாவின் வெரோனிகா, பெல்ஜியத்தின் மெர்டென்ஸ் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை ஆஸ்டபென்கோ ஜோடி 6-3 என கைப்பற்றியது. அடுத்த செட்டை வெரோனிகா ஜோடி 6-2 என வசப்படுத்தி பதிலடி தந்தது.
வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த மூன்றாவது, கடைசி செட்டில் வெரோனிகா ஜோடி 6-4 என அசத்தியது. முடிவில் வெரோனிகா ஜோடி 3-6, 6-2, 6-4 என வெற்றி பெற்று கோப்பை கைப்பற்றியது.

Advertisement