50 சதவீத விளையாட்டு மைதானங்கள்; நாளைக்குள் 'ஜியோ டேகிங்' பதிவு

திருப்பூர், திருப்பூர் மாவட்டத்திலுள்ள விளையாட்டு மைதான விவரங்களை பதிவு செய்வது குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலக அரங்கில் நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள்; பள்ளி, கல்லுாரி உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், தனியார் விளையாட்டு அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாவது: தமிழகம் முழுவதும், அனைத்து மாவட்டங்களிலுள்ள விளையாட்டு மைதானங்களின் முழு விவரங்களையும் பதிவு செய்து அனுப்ப, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் அரசு, தனியார் துறைகள், விளையாட்டு சங்கங்களின் கட்டுப்பாட்டிலுள்ள விளையாட்டு மைதான விவரங்களையும், 'ஜியோ டேகிங்' முறையில் பதிவு செய்யவேண்டும். பள்ளி, கல்லுாரிகளில், உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்; ஊராட்சிகளில், ஊராட்சி செயல் அலுவலர்கள், நேரு யுவகேந்திரா இளைஞர்கள், மாணவ, மாணவியர் மூலமாகவும் மற்றும் தனியார் விளையாட்டு சங்கத்தினரும் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள மைதான விவரங்களை சேகரித்து வழங்கவேண்டும்.

அட்சரேகை, தீர்க்க ரேகை எண்களுடன் கூடிய மைதானத்தின் அமைவிடம்; செயல்படுத்தப்பட்டுவரும் விளையாட்டுக்கள்; மைதானம் தற்போது செயல்பாட்டில் உள்ளதா அல்லது செயல்பாடின்றி உள்ளதா என்கிற முழு விவரங்களையும், கூகுள் படிவத்தில் பதிவு செய்யவேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை, geotagtpr@gmail.com என்கிற முகவரிக்கு, இ-மெயிலில் அனுப்பிவைக்கவேண்டும். முதல்கட்டமாக, வரும் 15 ம் தேதிக்குள் (நாளை) 50 சதவீத மைதானங்களின் விவரங்களை பதிவு செய்து அனுப்பவேண்டும். மேலும் விவரங்களுக்கு, 74017 03515 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம், என, அறிவுறுத்தப்பட்டது.

Advertisement