ஆக., 27ல் விநாயகர் சதுர்த்தி சிலை தயாரிப்பு பணி விறுவிறு

நாமக்கல்: நாடு முழுவதும், வரும் ஆக., 27ல் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, நாமக்கல் கருப்பட்டிபாளையம் அருகே, சக்தி நகரில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இங்கு அரை அடி முதல், 10 அடி உயரம் வரை சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. சிங்கம், மயில், மான், எலி மற்றும் யானை மீது விநாயகர் அமர்ந்து இருப்பது போன்ற சிலைகள், ஆஞ்சநேயர் மற்றும் சிவன், பார்வதியுடன் உள்ள விநாயகர் சிலைகள் தயாரித்து விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணியும் நடந்து வருகிறது.

இதுகுறித்து, சிலை தயாரிப்பாளர் சித்ரா கூறியதாவது:

நாங்கள் தயாரிக்கும் சிலைகள், பேப்பர் கூழ், கிழங்கு மாவு மற்றும் களிமண் கொண்டு தயாரிப்பதால் எளிதில் தண்ணீரில் கரைந்து விடும். இதேபோல், கடலுார் மாவட்டத்தில் இருந்து சிலைகளின் உதிரி பாகங்களை வாங்கி வந்து, இங்கு பொருத்தி வர்ணம் பூசும் பணியையும் செய்து வருகிறோம். எனவே, நாமக்கல் மட்டுமின்றி, கரூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் எங்களிடம் சிலைகளை வாங்கி செல்கின்றனர். இந்த சிலைகளை அவற்றின் தரத்தை பொறுத்து, 50 ரூபாய் முதல், 30,000 ரூபாய் வரை விற்பனை செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement