எம்ஜிஆர் உடன் 26: சிவாஜி உடன் 22 படங்கள் : தமிழ் சினிமாவை கலக்கிய ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜா தேவி

தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் "அபிநய சரஸ்வதி", "கன்னடத்துப் பைங்கிளி" என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர். வயது மூப்பால் வரும் உடல்நல பிரச்னையால் பெங்களூருவில் காலமானார். சரோஜாதேவியின் வாழ்க்கை பயணம் இதோ...
முதல் அறிமுகம்
கர்நாடகா மாநிலம், பெங்களுருவில் 1938ம் ஆண்டு ஜன., 7ல் பிறந்தவர் நடிகை சரோஜா தேவி. 1950 மற்றும் 60களில் முதன்மைக் கதாநாயகியாக வலம் வந்தவர். 1955ம் ஆண்டு, நடிகரும், தயாரிப்பாளருமான ஹொன்னப்ப பாகவதரின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவான "மகாகவி காளிதாசா" என்ற கன்னட திரைப்படத்தின் வாயிலாக வெள்ளித்திரைக்கு அறிமுகப் படுத்தப்பட்டார். முதல் படத்தில் கதாநாயகியாக நடித்தது மட்டுமின்றி படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
நாள் ஒன்றுக்கு 20 மணிநேரம் நடித்த பிஸியான நடிகை
இதனைத்தொடர்ந்து தமிழில் "தங்கமலை ரகசியம்", "திருமணம்" ஆகிய திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து நடித்திருந்தாலும், 1958ம் ஆண்டு எம்ஜிஆர் தயாரித்து, இயக்கி, இரட்டை வேடங்களில் நடித்து மிகப் பெரிய வெற்றியை ஈட்டிய "நாடோடி மன்னன்" திரைப்படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக இவர் நடித்த கதாபாத்திரமே இவர் தமிழில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க காரணமாயிருந்தது.
இதன் தொடர்ச்சியாக இயக்குநர் ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த "கல்யாணப் பரிசு", இயக்குநர் ஏ.பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த "பாகப்பிரிவினை"
ஆகிய திரைப்படங்கள் இவருக்கு தமிழில் ஒரு நட்சத்திர அந்தஸ்த்தை பெற்றுத் தந்தது. 1957 ஆம் ஆண்டு என்டி.ராமாராவ் நடிப்பில் வெளிவந்த "பாண்டுரங்க மகாத்மியம்" என்ற படம் தான் இவர் தெலுங்கில் அறிமுகமாக வழிவகுத்தது. 1960களில் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் பணிபுரியும் அளவிற்கு பிஸியான நடிகையாக வலம் வந்தார்.
எம்ஜிஆர் உடன் 26, சிவாஜி உடன் 22
"நாடோடி மன்னன்" தொடங்கி "அரசகட்டளை" வரை எம்ஜிஆருடன் மட்டும் 26 படங்களில் ஜோடியாக நடித்த பெருமை இவருக்குண்டு. நடிகர் சிவாஜி உடன் மட்டும் 22 படங்களில் நடித்துள்ளார். தமிழில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், தெலுங்கில் என்டி ராமாராவ், ஏ நாகேஸ்வரராவ், கன்னடத்தில் ராஜ்குமார் என அன்றைய முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து ஏராளமான வெற்றிப் படங்களை தந்தார்.
@block_B@
நாடோடி மன்னன் (1958), திருடாதே (1961), தாய் சொல்லைத் தட்டாதே (1961), பாசம் (1962), தாயைக் காத்த தனயன் (1962), மாடப்புறா (1962), குடும்பத்தலைவன் (1962), தர்மம் தலைகாக்கும் (1963), பெரிய இடத்துப் பெண் (1963), பணத்தோட்டம் (1963), நீதிக்குப்பின் பாசம் (1963), தெய்வத் தாய் (1964), படகோட்டி (1964), என் கடமை (1964), தாயின் மடியில் (1964), பணக்கார குடும்பம் (1964), எங்க வீட்டுப் பிள்ளை (1965), ஆசை முகம் (1965), கலங்கரை விளக்கம் (1965), நான் ஆணையிட்டால் (1966), அன்பே வா (1966), நாடோடி (1966), பெற்றால்தான் பிள்ளையா (1966), பறக்கும் பாவை (1966), தாலி பாக்கியம் (1966), அரச கட்டளை (1967).block_B
@block_B@
தங்கமலை ரகசியம் (1957), சபாஷ் மீனா (1958), பாகப்பிரிவினை (1959), விடி வெள்ளி (1960), இரும்புத்திரை (1960), பாலும் பழமும் (1961), வளர் பிறை (1962), பார்த்தால் பசி தீரும் (1962), ஆலயமணி (1962), இருவர் உள்ளம் (1963), குலமகள் ராதை (1963), கல்யாணியின் கணவன் (1963), புதிய பறவை (1964), என் தம்பி (1968), அன்பளிப்பு (1969), அஞ்சல் பெட்டி 520 (1969), தேனும் பாலும் (1971), அருணோதயம் (1971), பாரம்பரியம் (1993), ஒன்ஸ்மோர் (1997).block_B
அன்றைய டிரெண்டிங் நடிகை
1959 ஆம் ஆண்டு "பைகாம்" என்ற திரைப்படத்தின் வாயிலாக ஹிந்தியிலும் தடம் பதித்தார். "சசுரால்", "ஒபேரா ஹவுஸ்", "பியார் கியா தோ டர்னா கியா", பேட்டி பேட்டே" ஆகியவை ஹிந்தியில் இவர் நடித்து வெளிவந்த திரைப்படங்களாகும். திரைப்படங்களில் இவருடைய உடையலங்காரம், சிகையலங்காரம் மற்றும் இவர் அணிந்து வரும் ஆபரணங்கள் அன்றைய பெண்களை வெகுவாக ஈர்த்திருந்தது.
திருமணத்திற்கு பிறகும் அசத்திய நடிகை
1967-ல் ஸ்ரீஹர்ஷா என்பவரை மணம் புரிந்தார். திருமணத்திற்குப் பின் எம்ஜிஆரோடு இணைந்து நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிட்டவில்லை. இவர் எம்ஜிஆரோடு இணைந்து நடித்த கடைசி திரைப்படம் 1967-ல் வெளிவந்த "அரசகட்டளை" ஆகும். இருந்தாலும் திருமணத்திற்குப் பின்பும் நடிப்பைத் தொடர்ந்தார். "என் தம்பி", "அஞ்சல் பெட்டி 520", "தேனும் பாலும்", "அருணோதயம்", "அன்பளிப்பு" ஆகிய திரைப்படங்களில் சிவாஜி கணேசனுடனும், "பணமா பாசமா", "தாமரை நெஞ்சம்", "மாலதி", "கண்மலர்" போன்ற திரைப்படங்களில் ஜெமினி கணேசனுடனும் நடித்ததோடு, அன்றைய இளம்நாயகர்களான ரவிச்சந்திரனோடு "ஓடும் நதி" என்ற திரைப்படத்திலும், முத்துராமனுடன் "பத்து மாத பந்தம்" என்ற படத்திலும் நடித்திருந்தது குறிப்பிடதக்கது.
கடைசிப்படம்
கால் நூற்றாண்டுக்கு மேல் தமிழ் திரையுலகில் முதன்மை நாயகியாக கோலோச்சியிருந்த நடிகை சரோஜா தேவி அடுத்த தலைமுறை நாயகர்களான விஜயகாந்த், அர்ஜுன் ஆகியோருடனும் அதற்கும் அடுத்த தலை முறை நாயகர்களான விஜய், சூர்யா ஆகியோருடனும் இணைந்து பணிபுரிந்திருக்கின்றார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஏறக்குறைய 200க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கின்றார். இயக்குநர் கே எஸ் ரவிகுமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து 2009-ல் வெளிவந்த "ஆதவன்" திரைப்படமே இவர் நடித்து வெளிவந்த கடைசி தமிழ் திரைப்படமாகும்.


மேலும்
-
அரசு பள்ளியில் குழந்தைகளைக் கழிவறையைச் சுத்தம் செய்ய வைப்பதா? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை ஆவேசம்
-
மிகவும் சிக்கலான விஷயம்; கேரள நர்ஸ் மரண தண்டனையை நிறுத்த கோரிய வழக்கில் மத்திய அரசு பதில்
-
தனிக்கட்சி தொடங்க திட்டமா? செப்., 4ல் அறிவிக்கிறார் ஓ.பி.எஸ்.,
-
சுமூகமான உறவு; சீனாவுக்கு ஜெய்சங்கர் அழைப்பு
-
உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் மீது 45 நாளில் தீர்வு: கூடுதல் தலைமை செயலாளர் அமுதா உறுதி
-
கனடா இந்தியர்கள் ரத யாத்திரையில் முட்டை வீசி தாக்குதல்: இனவெறி கும்பல் அட்டூழியம்