டில்லியில் மாயமான திரிபுரா மாணவி; 6 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு

1

புதுடில்லி: டில்லியில் கடந்த 6 நாட்களாக மாயமாகி இருந்த திரிபுராவைச் சேர்ந்த மாணவி, யமுனா ஆற்றங்கரையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திரிபுராவைச் சேர்ந்த 19 வயது மாணவி ஸ்நேகா தேப்நாத், டில்லியில் உள்ள ஆத்ம ராம் சனாதன் தர்மா கல்லூரியில் பி.எஸ்.சி., கணிதப்பிரிவில் 2ம் ஆண்டு பயின்று வந்தார். டில்லியில் தனது குடும்பத்தாருடன் வசித்து வந்த அவர், கடந்த 7ம் தேதி முதல் மாயமானார்.


மாணவி ஸ்நேகாவை கண்டுபிடிக்கக்கோரி திரிபுரா முதல்வர் மணிக் சாஹா வலியுறுத்தியிருந்தார்.

இதையடுத்து, அவரது சகோதரி பிபாஷா தேப்நாத் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது; தோழி பிதுனியாவை ரயில்நிலையத்தில் விட்டு விட்டு வருவதாக தாயாரிடம் ஸ்நேகா கூறி விட்டு சென்றார். இதற்காக அதிகாலை 5.15 மணிக்கு சுபே சந்திரா என்பவரின் டாக்ஸியில் சென்றுள்ளார். காலை 8.45 மணியளவில் ஸ்நேகாவை தொடர்பு கொள்ள முயன்ற போது, செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.


அதன்பிறகு, பிதுனியாவை தொடர்பு கொண்டு கேட்ட போது, ஸ்நேகாவை சந்திக்கவே இல்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து, டாக்ஸி ஓட்டுநரை தொடர்பு கொண்டு பேசிய போது, ஸ்நேகாவை வாஷிராபாத்தில் உள்ள சிக்னேச்சர் பாலத்தில் இறக்கி விட்டதாக கூறினார், என குறிப்பிட்டுள்ளார்.



இதனால், ஸ்நேகாவை யாரேனும் கடத்தி விட்டார்களா? என்ற சந்தேகம் எழுந்தது. இதனிடையே, பாலத்தின் மீது ஸ்நேகா நின்று கொண்டிருந்ததாக அங்கிருந்தவர்கள் சிலர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.


அதன்பேரில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரின் உதவியுடன் டில்லி போலீசார், யமுனா ஆற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், கீதா காலனி பகுதியில் மாணவி ஸ்நேகா சடலமாக மீட்கப்பட்டார்.


இதனிடையே, ஸ்நேகா தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் தான் வீட்டை விட்டு கிளம்பிச் சென்றதாக, அவர் எழுதி வைத்த கடிதத்தை குடும்பத்தினர் போலீசாரிடம் கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் டில்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement