'இ.பி.எஸ்., கருத்து எங்களுக்கு வேதவாக்கு' முருகனுக்கு அ.தி.மு.க., முனுசாமி பதிலடி

கிருஷ்ணகிரி: ''அ.தி.மு.க., தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்குமென, எங்கள் பொது செயலர் சொன்ன கருத்தே, எங்களின் வேதவாக்கு,'' என, அக்கட்சியின் துணை பொது செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., கூறினார்.

கிருஷ்ணகிரியில் அவரது முன்னிலையில், அ.ம.மு.க., மற்றும் பா.ஜ.,வில் இருந்து, 200க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி, அ.தி.மு.க.,வில் நேற்று இணைந்தனர்.

அப்போது நிருபர்களிடம் முனுசாமி கூறியதாவது:

அ.தி.மு.க.,வை பொறுத்தவரை கட்சி கொள்கை மற்றும் மக்களின் தீர்ப்பே வேதவாக்கு. கட்சி கூட்டணி என்பது வேறு, தேர்தல் முடிந்த பின், ஆட்சி அமைப்பது வேறு.

பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியில் பல்வேறு கருத்து வரலாம். இதற்கெல்லாம் தற்போது பதில் சொல்லும் சூழ்நிலை வரவில்லை. அ.தி.மு.க., தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என, பொது செயலர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.

அதுவே எங்கள் வேதவாக்கு. அதை நோக்கி எங்களது பயணம் தொடரும். காவலாளி அஜித்குமார் மரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது பற்றி, த.வெ.க., தலைவர் விஜய் பேசியது சரியானது.

தற்போது தேர்தல் வருவதால், சி.பி.ஐ., விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தி.மு.க., ஆட்சியின் அவலங்களை இ.பி.எஸ்., எடுத்துரைத்து வருகிறார். இதனால் ஸ்டாலின் பயந்து, அ.தி.மு.க., பா.ஜ., பின்னால் மறைந்து கொண்டிருப்பதாக பிதற்றுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தொடர்பாக, கூறிய கருத்தே எங்களுக்கு வேதவாக்கு என்று, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய இணை அமைச்சர் முருகன் கூறியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக முனுசாமி பேசியுள்ளார்.

Advertisement