உருக்குலைந்த எண்ணுார் துாண்டில் வளைவுகள்...ஆபத்து :பருவமழைக்கு முன் சீரமைக்காவிட்டால் சிக்கல்

எண்ணுார்:கடலரிப்பை தடுக்க, திருவொற்றியூர் முதல் எண்ணுார் வரை அமைக்கப்பட்ட துாண்டில் வளைவுகள், உருக்குலைந்து விட்டதால், பருவ மழைக்காலத்தில் பெரும் பாதிப்பு ஏற்படுமோ என, வடசென்னை மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சின்னக்குப்பம் முதல் பாரதியார் நகர் வரையிலான, 2 கி.மீ., துாரம், புதிய துாண்டில் வளைவுகள் அமைக்காததால், குடியிருப்புகள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை எண்ணுாரில், தாழங்குப்பம் முதல் நல்லத்தண்ணீர் ஓடை குப்பம் வரை, 22 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள, 15,000க்கும் அதிகமான மீனவர்கள், கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் தொழில் செய்கின்றனர்.
நிம்மதி
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வரை புயல், சூறாவளி, காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் அமாவாசை - பவுர்ணமி தினங்களில் கடல் சீற்றத்தால், மண் அரிப்பு, வீடுகளில் கடல் நீர் புகுவது போன்ற பிரச்னைகளால் மீனவர்களின் படகுகள், வலைகள், வீடுகள் கடும் சேதமாகின.
இதற்கு தீர்வாக, காசிமேடு, செரியன் நகர் - எர்ணாவூர், பாரதியார் நகர் வரை, 14 இடங்களில், 150 மீட்டர் துாரத்திற்கு நேராக, கடலில் பாறாங்கற்கள் கொட்டி, 2004ம் ஆண்டு துாண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டன.
இரண்டாம் கட்டமாக, 2017ல், எண்ணுார் - நெட்டுகுப்பம் முதல் தாழங்குப்பம் வரை, 31.82 கோடி ரூபாய் செலவில், 10 இடங்களில், 60, 120, 240 அடி துாரம், மூன்று அளவுகளில் துாண்டில் வளைவுகள் கட்டமைக்கப்பட்டன. இதில், ஆங்கில எழுத்தான, 'டி' வடிவிலான துாண்டில் வளைவுகளும் அடங்கும்.
மூன்றாம் கட்டமாக, 2019 - 2020ல், 38 கோடி ரூபாய் செலவில், தாழங்குப்பம் முதல் சின்னகுப்பம் வரை, ஒன்பது இடங்களில் அமைக்கப்பட்டன. இதில், 15வது துாண்டில் வளைவு, 350 அடி துாரமும், 16வது, 450 அடி துாரம் கடலில் பாறாங்கற்கள் கொட்டி, மீன்பிடி முள் போன்று வளைத்து விடப்பட்டிருந்தது.
இந்த துாண்டில் வளைவுகள் அமைக்கப்பட்ட பின், எண்ணுார் - திருவொற்றியூர் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில், கடல் சீற்றத்தால் ஏற்படும் மண் அரிப்பு பிரச்னைகள் வெகுவாக குறைந்தது. மீனவர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
சேதம்
இந்நிலையில், செரியன் நகர் - பாரதியார் நகர் வரை, 150 மீட்டர் துாண்டில் வளைவுகள் அமைத்து, 20 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதால், பாறாங்கற்கள் சரிந்து, வெறும், 50 - 80 மீட்டர் துார அளவிற்கே உள்ளன.
எண்ணுாரில் அமைக்கப்பட்ட, 'டி' வடிவ துாண்டில் வளைவுகளும், சின்னகுப்பத்தில், மீன்பிடி முள் போன்ற துாண்டில் வளைவுகளும் உருக்குலைந்துவிட்டன.
இதே நிலை நீடித்தால், வரும் பருவமழையின் போது, ஆழ்கடலில் உருவாகும், புயல், சூறாவளி, காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஏற்படும் கடல் சீற்றத்தால், வடசென்னை மீனவ கிராமங்கள் கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது.
சம்பந்தப்பட்ட, நீர்வளத்துறை அதிகாரிகள் கவனித்து, பருவமழைக்கு முன், உருக்குலைந்த அனைத்து துாண்டில் வளைவுகளையும், போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.
தவிர, சின்னகுப்பம் - பாரதியார் நகர் வரையில் இடைப்பட்ட, 2 கி.மீ., துாரம், எர்ணாவூர் குப்பம், இந்திராகாந்தி குப்பம், நேதாஜி நகர், வடக்கு பாரதியார் நகர் கடற்கரை கிராமங்கள் ஒட்டிய கடல் பகுதியில், துாண்டில் வளைவுகள் இல்லாததால், கடல் சீற்றத்தால் பாதிப்பு உள்ளது.
எனவே, விடுப்பட்ட இடங்களில், புதிய துண்டில் வளைவுகள் அமைக்கப்பட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
மராமத்து அவசியம்
சின்னகுப்பம் பகுதியில், 2019ல் துாண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டன. ஆனால், மீன்பிடி முள் போன்ற அமைப்பு ஏற்படுத்தவில்லை. இருப்பினும், அமைத்த துாண்டில் வளைவும் தற்போது, கற்கள் சரிந்து உருக்குலைந்து போய்விட்டன. பருவமழைக்கு முன், மராமத்து பணிகளை கண்டிப்பாக செய்ய வேண்டும். துாண்டில் வளைவின் நுனி பகுதியில் கற்கள் சரியாத வண்ணம், கான்கிரீட் நட்சத்திர கற்கள் அடுக்கி, கான்கிரீட் கலவைகள் ஊற்றி இறுக செய்தால், கற்கள் சரியும் பிரச்னை இருக்காது. அதன்படி, சின்னகுப்பத்தில், வடக்கு துாண்டில் வளைவு, 100 மீட்டர் நீட்டித்து, 50 மீட்டர் துாரம் வளைக்க வேண்டும். தெற்கு துாண்டில் வளைவு, 100 மீட்டர் நீட்டிக்க வேண்டும்.
- பி.தென்னரசு, 49,மீனவர், பெரியகுப்பம்
மேலும்
-
அமெரிக்க சர்ச்சில் துப்பாக்கிச்சூடு; பெண்கள் இருவர் உயிரிழப்பு
-
கேரளாவில் நிபா வைரஸூக்கு 2வது பலி; 6 மாவட்டங்களில் உச்சகட்ட கண்காணிப்பு
-
சிறை காவலர்களுக்கு இருண்ட காலம்: கூடுதல் டி.ஜி.பி., மீது பகீர் குற்றச்சாட்டு
-
ஆவின் நிறுவனத்தில் வாயு கசிவால் பரபரப்பு
-
சதி திட்டம் தீட்டுபவர்கள்தான் ராமதாசிடம் உள்ளனர்; அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ., சிவக்குமார் பேட்டி
-
4 ஆண்டுகளாக ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறது அ.ம.மு.க., தினகரன் சாடல்