அருப்புக்கோட்டை - இருக்கன்குடி 'பாயின்ட் டூ பாயின்ட்' பஸ் எதிர்பார்ப்பு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் இருந்து நேரடியாக இருக்கன்குடிக்கு 'பாயின்ட் டூ பாயின்ட்' பஸ் விட பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அருப்புக்கோட்டையில் இருந்து 35 கி.மீ., துாரத்தில் இருக்கன்குடி உள்ளது. இங்குள்ள முத்து மாரியம்மன் கோயில் மாவட்டத்தில் புகழ்பெற்றது. மாவட்டத்தின் பல ஊர்களில் இருந்து இந்த கோயிலுக்கு பக்தர்கள் வருவர். அருப்புக்கோட்டையில் இருந்தும் அனைத்து நாட்களிலும் குறிப்பாக செவ்வாய், வெள்ளி கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் செல்வர்.

அருப்புக்கோட்டையில் இருந்து இருக்கன்குடிக்கு அரசு, தனியார் பஸ்கள் சென்றாலும் பல ஊர்களில் பஸ்கள் நின்று செல்வதால் குறிப்பிட்ட நேரத்தில் கோயிலுக்கு சென்றடைய முடியாமலும் அம்மனை தரிசிக்க முடியாமலும் பக்தர்கள் தவிக்கின்றனர்.

கோயிலுக்கு செல்வதற்குள் நடை சாத்தப்பட்டு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு அருப்புக்கோட்டையில் இருந்து இருக்கன்குடிக்கு 'பாயின்ட் டூ பாயின்ட்'பஸ் விட பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் இது குறித்து ஆய்வு செய்து அருப்புக்கோட்டை - இருக்கன்குடிக்கு 'பாயின்ட் டூ பாயின்ட்' பஸ் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement