ஐவகை பழங்கள், ஆக்சிஜன் வழங்கும் சந்தன மூங்கில் வீட்டுத்தோட்டத்தை பராமரிக்கும் தம்பதிக்கு குவியும் பாராட்டு

போடி - தேனி செல்லும் மெயின் ரோட்டில் போஜன் பார்க் அருகே போடி முன்னாள் எம்.எல்.ஏ., ஏ.எஸ்.சுப்பராஜ் அவர்களால் உருவாக்கப்பட்ட இல்லத்தில் வசிக்கும் அவரது பேரன் தரணிதரன்.
அவரது மனைவி கீதா குடும்பத்தினர் வீட்டை சுற்றிலும் 50 சென்ட் இடத்தில் தோட்டம் அமைத்து இயற்கை சாகுபடியில் பழங்கள், பூக்கள், மூலிகை, கீரை, சமையலுக்கு தேவையான காய்கறிகளை தாங்களே அறுவடை செய்து கவனத்தை ஈர்த்து வருவதால் இத்தம்பதியினருக்கு பாராட்டுகள் குவிக்கின்றன.
மேலும் வீட்டில் இவர்களால் வளர்க்கப்படும் மாட்டுப் பண்ணையில் கிடைக்கும் சாணம், காய்கறி கழிவுகளை தொட்டியில் போட்டு மக்க வைத்து வீட்டிலேயே உரமாக்கும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
பவளமல்லி, பூத்துக் குலுங்கும் பூக்கள், நறுமணம் கமழும் மனோரஞ்சிதம், மூலிகைச் செடிகள் சுவையை அறியத் துாண்டும் சப்போட்டா, கொத்து கொத்தாய் காய்த்து தொங்கும் மாம்பழங்கள், சீத்தா, கொய்யா பழங்கள் காய்ந்துள்ளன.
தேனை உண்ண வரும் தேன் சிட்டு, ஸ்டிச்சிங் பேர்டு, குயில் உள்ளிட்ட பறவைகள் வருவதோடு பழங்களை உண்பதற்காக அணில்கள் வந்து செல்வது தொடரும் நிகழ்வாக உள்ளது.
சுற்றுச் சூழல் பாதிப்பு இல்லாத வகையில் வீட்டு தோட்டத்தை அமைத்து உள்ளனர். இதனால் அப்பகுதியே ரம்மியமாக காட்டசியளிக்கிறது.
வீட்டு தோட்டத்தில் துளசி, கற்பூரவள்ளி, ஓமவல்லி, புதினா, கறிவேப்பிலை, செம்பருத்தி, மருதாணி, வெற்றிலை உள்ளிட்ட செடிகள், ஆக்சிஜன் அதிகளவில் வெளியிடும் சந்தன மூங்கில் மரங்களை வளர்த்து உள்ளனர்.
மன மகிழ்ச்சி
எஸ்.தரணிதரன், தொழில் முனைவர், போடி: இயற்கைக்கு ஈடு இணை கிடையாது. இயற்கை மீது ஆர்வம் உள்ளதால் இரவில் பூக்கும் நைட் குயின், வீட்டை சுற்றி பல வகை வண்ணப் பூக்கள், செம்பருத்தி, அரளி, தங்க அரளி, மனோரஞ்சிதம், மல்லி, அடுக்கு மல்லி, அடுக்கு செம்பருத்தி, பிரம்ம கமலம், பவளமல்லி, சரக்கொன்றை, நந்தியா வட்டம், இட்லி பூ, கல்வாழை பூக்களும், சுவையை துாண்டும் சப்போட்டா, மா, கொய்யா, சீதா, எலுமிச்சை, நாவல், பப்பாளி, அன்னாசி, இமாம் புஷ்பம், நார்த்தங்காய், மாதுளை, கொய்யா உள்ளிட்ட பழ வகைகளும், தென்னை, முருங்கை, அழகு தரும் சந்தன மூங்கில், பாக்கு மரங்களும், கத்தரி, வெண்டை, பாகற்காய், அவரை கறி பலா உள்ளிட்ட மரங்களை 40 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பத்தினரின் ஒற்றுமையோடு வளர்த்து வருகின்றோம். வீட்டின் வளாகப் பகுதியை சுற்றி தினமும் நடை பயிற்சி மேற்கொள்வோம். ஆட்கள் மூலம் தோட்டச் செடிகளை பராமரித்து வருகின்றோம். கொரோனா ஊரடங்கு காலங்களில் எங்களுக்கு மனதிற்கு வீட்டுத்தோட்டம் தான் நிம்மதியை தந்தது., என்றார்.
இயற்கை சாகுபடி
டி.கீதா. குடும்பத் தலைவி, போடி : வீட்டை சுற்றிலும் 500 க்கும் மேற்பட்ட செடிகள், மரங்களை வளர்த்து இயற்கை முறையில் பராமரித்து வருகின்றோம். வீட்டின் பின் பகுதியில் மாடுகள் வளர்த்து வருவதால் அதன் சாணம், காய்கறி கழிவுகள், செடிகளில் உதிரும் இலைகள், மக்கும் கழிவுகள், உதிர்ந்த பூக்களை பெரிய தொட்டியில் கொட்டி மூடி வைக்கின்றோம். 40 நாட்களுக்கு மேலாக மக்க வைப்பதன் மூலம் இயற்கை உரம் கிடைக்கிறது.
வெளியே எவ்வித உரமும் வாங்குவது இல்லை. இதனால் செடிகளை தாக்கும் பூச்சிகளை விரட்டி, செடிகள் மரங்களை வளர்க்க உதவுகின்றன.
வீட்டின் பூஜைக்கு தேவையான பூக்கள், காய்கறி, கீரை, மூலிகை, பழங்களுக்கான மரங்களை வளர்த்தும் அதிக அளவில் அறுவடை செய்வதன் மூலம் உடலுக்கு ஆரோக்கியமும், உரிய சத்தும் கிடைக்கிறது.
இயற்கையை நேசிப்பதன் மூலம் மனதிற்கு மகிழ்ச்சியை தருகின்றன. வீட்டில் இருக்கும் பெண்கள் கிடைக்கும் ஓய்வு நேரங்களை பயன்படுத்தி வீட்டின் முன் உள்ள காலி இடம், மாடியில் சிறிய அளவில் தோட்டம் அமைக்கலாம்., என்றார்.
மேலும்
-
மக்களின் மொபைல் எண்களை சேகரிக்க அதிகாரிகளை பயன்படுத்தும் தி.மு.க., அரசு; இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
எம்ஜிஆர் உடன் 26: சிவாஜி உடன் 22 படங்கள் : தமிழ் சினிமாவை கலக்கிய ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜா தேவி
-
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார்
-
காசாவில் ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் பலி; தொழில்நுட்ப தவறு என காரணம் சொல்கிறது இஸ்ரேல்!
-
டில்லியில் மாயமான திரிபுரா மாணவி; 6 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு
-
அமெரிக்க சர்ச்சில் துப்பாக்கிச்சூடு; பெண்கள் இருவர் உயிரிழப்பு