45 அடி உயர துாணில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

புதுடில்லி:டில்லி- - மும்பை விரைவுச்சாலை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி, 45 அடி உயரத்திலிருந்து விழுந்து உயிரிழந்தார்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், டில்லி - -மும்பை விரைவுச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

தென்கிழக்கு டில்லி ஆசிரமம் அருகே, நேற்று முன் தினம் பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. காலை, 9:20 மணிக்கு 45 அடி உயர துாணில் ஏறி சச்சின் என்ற தொழிலாளி வேலை செய்து கொண்டிருந்தார். திடீரென கைநழுவி தவறி விழுந்தார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த சச்சின், அருகில் உள்ள ஹோலி பேமிலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டதை உறுதி செய்தனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார், சச்சின் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு உடற்கூறு ஆய்வு முடிந்து, குடும்பத்தினரிடம் உடல் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

புதுடில்லி சுல்தான்புரியில் வசித்த சச்சின், உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரைச் சேர்ந்தவர். தனியார் நிறுவன ஊழியரான அவர், தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்டத்தில் தன் நிறுவனத்தின் சார்பில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்தார்.

Advertisement