மழையின்றி குறைகிறது பெரியாறு அணை நீர்மட்டம்

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் மழையின்றி வெகுவாக குறைந்து வருகிறது. 3ம் முறையாக மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரமடையுமா என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் இடையே ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் துவங்கும். இந்தாண்டில் ஒரு வாரத்திற்கு முன்னதாக மே23ல் துவங்கியது. பருவமழை துவங்கிய உடனே முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் நீர்வரத்து வெகுவாக அதிகரித்தது. தொடர்ந்து பெய்த மழையால் ஒரு வாரத்தில் நீர்மட்டம் 15 அடிக்கு மேல் உயர்ந்து ஜூன் 1ல் 130 அடியை கடந்தது. அதன் பின் மழை குறைந்து நீர்மட்டமும் குறைய துவங்கியது.

ஜூன் 14 ல் பருவ மழை இரண்டாவது முறையாக தீவிரமடைந்து அணை நீர்ப்பிடிப்பில் தொடர் மழை பெய்தது. இதனால் மீண்டும் நீர் வரத்து அதிகரித்து. ஜூன் 28ல் நீர்மட்டம் 136 அடியை எட்டியது.

அதன்பின் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழையின்றி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி நீர்மட்டம் 131.90 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 772 கன அடி.தமிழகப் பகுதிக்கு குடிநீர், முதல் போக நெல் சாகுபடிக்காக 1867 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 5141 மில்லியன் கன அடியாகும். தென்மேற்குப் பருவமழை செப்டம்பரில் முடிவடையும். தற்போது மூன்றாவது முறையாக மீண்டும் நீர்ப்பிடிப்பில் மழை பெய்து நீர்மட்டம் உயருமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

Advertisement