துரோகி என்ற வார்த்தையை ஜீரணிக்க முடியவில்லை: கண்ணீர் விட்டு கதறிய மல்லை சத்யா

16

சென்னை: எனது பொது வாழ்க்கையை முடித்து வைக்கவே வைகோ எனக்கு துரோகி பட்டம் கொடுத்துள்ளார். இந்த வார்த்தையை ஜீரணிக்கவே முடியவில்லை என்று ம.தி.மு.க., துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா கண்ணீர் விட்டு கதறி அழுதார்.



ம.தி.மு.க.,வின் துணை பொதுச்செயலாளரும், வைகோவின் மனசாட்சியாகவும் தொண்டர்கள் மத்தியில் அறியப்படுபவர் மல்லை சத்யா. இவருக்கும் வைகோ மகனும், முதன்மை செயலாளருமான துரை வைகோவுக்கும் இடையே கடந்த சில மாதங்கள் முன்பாக கருத்து வேறுபாடு எழுந்தது.


இருவரது செயல்பாடுகளும் கட்சிக்குள்ளே பெரும் விரிசலை ஏற்படுத்திய நிலையில், வைகோ தலையிட்டு சமாதானப்படுத்தினார். அதன் பின்னர் நடைபெற்ற கட்சியின் நிர்வாகக்குழு கூட்டத்தில் மல்லை சத்யாவை வைகோ குற்றம்சாட்டி பேசினார். 2 ஆண்டுகளாக கட்சிக்கு மாறாக மல்லை சத்யா செயல்பட்டு வருவதாகவும் பேசினார்.


அதை தொடர்ந்து தொலைக்காட்சி ஒன்றில் வைகோ பேசிய போது, பிரபாகரனுக்கு மாத்தையா செய்த துரோகத்தை விட மல்லை சத்யா எனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று பேசினார். வைகோவின் இந்த பேச்சு, ம.தி.மு.க.,வில் பெரும் பேசு பொருளானது. துரோகி என்ற பட்டம் கொடுத்ததற்கு பதிலாக விஷம் கொடுத்து கொன்றிருக்கலாம் என்று தமது முகநூலில் மல்லை சத்யா பதில் அளித்து இருந்தார்.


இந்நிலையில், துரோகி என்ற வைகோவின் பட்டம் குறித்தும், தம் மீதான குற்றச்சாட்டு குறித்தும் மல்லை சத்யா தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்து இருந்தார்.


அதில் தம் மீது வைகோ சுமத்திய துரோகி பட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.


அப்போது பேசிய மல்லை சத்யா, உலகமே தலைகீழாக பிரண்டாலும் என்னை அவர் (வைகோ) கைவிட மாட்டார் என்று நான் உறுதியாக நம்பினேன். அவரை நான் நன்கறிந்தவன். மாத்தையா அளவுக்கு என்னை கொண்டு வந்து நிறுத்திவிட்டார்.


காலம் முழுக்க ஒரு பழியை சுமந்து நிற்க வேண்டுமே என்ற வேதனை தான். அவருக்காக நான் மரணத்துடன் கூட போராடி இருக்கிறேன். (கண்ணீர்விட்டு அழுகிறார்) நான் இறந்து போயிருக்கணும். கடலில் இருக்கும் போது கூட எனக்கு ஏதாவது ஆகி, நான் கடலில் செத்து போயிருந்தால் கூட, ஒரு நிலைத்த பேர் கிடைச்சிருக்கும்.


ஆனால் ஒரு தீராத பழியை அவர் சுமத்திட்டார் என்ற கவலைதான். ஏன் என்றால் அவர் ஒரு உயர்ந்த தலைவர். மிக சிறந்த நாடாளுமன்றவாதி. ஒரு மாமனிதர், ஒரு சாதாரண என்னை இப்படி சொல்லிட்டாரே...வேறு ஏதேனும் சொல்லி இருக்கலாம்.


என் மீது குறைபாடுகள் இருந்திருக்கலாம், அதை சொல்லி இருக்கலாம். ஆனால் என் பொது வாழ்க்கையை முடித்து வைப்பதற்கு துரோகி என்ற பட்டம் கொடுத்தது என்னால் (கண்ணீர் விட்டு கதறுகிறார்) தாங்கிக் கொள்ள முடியவில்லை.


நாட்டு மக்கள் சொல்லட்டும், நான் துரோகியா என்று? அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும் என்று என்னுடைய பதிவில் கூட சொல்லி இருப்பேன். அரசியலில் நான் தவறு செய்திருந்தேன் என்றால் இந்நேரம் நான் இறந்திருக்கணும். காலம் பதில் சொல்லும் அதற்கு.


ஏதாவது சொல்லி என்னை அனுப்பி இருக்கலாம், இல்லை ஒரு பாட்டில் விஷம் கொடுத்தாவது செத்துப் போடா என்று சொல்லி இருந்தால் செத்து போயிருப்பேன். தீராத பழியை எம்மீது சுமத்திட்டாரு என்ற கவலைதான், மனதை போட்டு வருத்திக்கிட்டே இருக்கு.


நான் உறங்கி ஐந்து நாட்கள் ஆகிறது (மீண்டும், மீண்டும் கதறி அழுகிறார்) துடித்துக் கொண்டு இருக்கிறேன். சமூகமே என்னை என்ன சொல்வாங்க, நினைப்பாங்க என்ற கவலை எனக்கு இருக்கு.


நான் கடந்து வருவேன். என்னை அவர்(வைகோ) போராளியாக தான் வளர்த்திருக்கிறார். இந்த நெருப்பு வளையத்தில் இருந்து நான் நிச்சயம் வெளியே வருவேன்.


இவ்வாறு மல்லை சத்யா கண்ணீர் மல்க பேசினார்.

Advertisement