இரவில் செயற்கை போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் போலீசார்
ராமநாதபுரம்: -இரவு நேரங்களில் ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்டில் செயற்கையாக போக்குவரத்து போலீசார் நெரிசலை உருவாக்குவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
ராமநாதபுரத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் திறக்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்தே பஸ்கள் அனைத்தும் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து போலீசார் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகிறோம் என்ற பெயரில் செயற்கையாக போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றனர்.
ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து பஸ்கள் வெளியேறுவதற்காக ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் செல்லும் ரோட்டில் போக்குவரத்து போலீசார் வாகனங்களை நிறுத்துகின்றனர்.
இதன் காரணமாக இந்த மெயின் ரோட்டில் வாகனங்கள் அணி வகுத்து நிற்பதால் பழைய பஸ் ஸ்டாண்ட பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எப்போதும் போல் போக்குவரத்து போலீசார் வாகனங்களை நிறுத்தாமல் இயக்கினால் போக்குவரத்து நெரிசலின்றி செல்ல முடியும்.
மேலும் குறுகலான ரோட்டின் நடுவில் தேவையின்றி அமைத்துள்ள பேரிகார்டுகளாலும் பல நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இரவு நேரங்களில் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகிறோம் என்ற போர்வையில் போக்குவரத்து நெரிசலை உருவாக்காமல் இருக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.