காமராஜர் பிறந்தார்.. கல்விக்கண் திறந்தார் இன்று (ஜூலை 15) கல்வி வளர்ச்சி நாள்
ராமநாதபுரம்: உற்றுழி உதவியும்உறு பொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது
கற்றல் நன்றே
என்கிறது புறநானுாறு.
கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே
என்கிறார் அவ்வையார் .
கேடில் விழுச்செல்வம் கல்வி
ஒருவருக்கு மாடல்ல மற்றை யவை
என்கிறார் திருவள்ளுவர்.
இவற்றையெல்லாம் உணர்ந்த முன்னாள் முதல்வர் காமராஜர் கிராமங்கள் தோறும்பள்ளிகள் அமைத்து அறிவுக்கண்களை திறந்து பள்ளியில்லா ஊரில்லை என்ற நிலையை உருவாக்கினார். அவர் பிறந்த தினமான இன்று (ஜூலை 15) தமிழக அரசு கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி சிறப்பிக்கிறது.
கல்விக்கண் திறந்த கர்மவீரர்
ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்த நாட்டு மக்கள் பெற்றிருக்கும் கல்வி அறிவாற்றல் ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறதுஎன்பதை உணர்ந்த காமராஜர் தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னர் கல்விச் செல்வத்தை ஏழைச்சிறார்களும் பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் மூன்று மைல் துாரத்திற்கு ஒரு பள்ளியை அமைத்தார்.
குறைந்தது 300 மக்கள் வாழும் ஒவ்வொரு சிற்றுார்களிலும் தொடக்கப்பள்ளி, 2000 மக்கள் வாழ்ந்தால் நடுநிலைப்பள்ளி, 5000 மக்கள் வாழும் நகரத்தில் ஒரு மேல்நிலைப்பள்ளிகளை உருவாக்கினார். தடுக்கி விழுந்தால் தொடக்கப்பள்ளி, ஓடி விழுந்தால் உயர்நிலைப் பள்ளி என்ற வரலாற்றை உருவாக்கினார்.
பூட்டிய பள்ளிகள் திறப்பு
இவருக்கு முந்தைய ஆட்சிக் காலத்தில் மூடப்பட்டிருந்த 3000 பள்ளிகளை மீண்டும் திறந்தார். அது தவிர 12 ஆயிரம் பள்ளிகள் இவரது ஆட்சிக் காலத்தில் புதிதாக திறக்கப்பட்டன. பதினோராம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்பட்டது. மாணவர்கள் மத்தியில் ஜாதி மத பேதங்களை போக்கிட இலவச சீருடை இவரது காலத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கல்வி கற்றோர் எண்ணிக்கை ஏழு சதவீதம் மட்டுமே இருந்தது. இவரது ஆட்சி காலத்தில் 37 சதவீதமாக உயர்ந்தது. கல்வி வளர்ச்சி என்பது அடிப்படைக் கல்வி பெறுவது மட்டுமல்ல, உயர்கல்வி பெற்று வாழ்க்கைக்கும் அது வழிகாட்டவேண்டும் என்பதை உணர்ந்திருந்த படிக்காத மேதையான காமராஜர் தன் ஆட்சி காலத்தில் 10 அரசு பொறியியல் கல்லுாரிகளை தொடங்கினார்.
அரசு கலைக் கல்லுாரிகளின் எண்ணிக்கையும் உயர்ந்தது. இது தவிர மருத்துவக் கல்லுாரி, கால்நடை மருத்துவக் கல்லுாரி, உடற்பயிற்சிக் கல்லுாரி, திரைப்படக் கல்லுாரி, ஆசிரியர் பயிற்சி பள்ளிகளும் தொடங்கப்பட்டன. மேலும் சென்னையில் இந்திய தொழில்நுட்பக் கழகம் ஐ.ஐ.டி.,யும் இவரது ஆட்சிக் காலத்தில் தான் தொடங்கப்பட்டது. உயர்கல்வி கற்பவருக்கு கல்வி உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்தார். அதனால் உயர் கல்விகற்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
மதிய உணவு எனும் மகத்தான திட்டம்
இலவசக் கல்வியோடு மதிய உணவு எனும் மகத்தான திட்டத்தை காமராஜர் அறிமுகம் செய்தார்.இலவசமாய் கல்வி கொடுத்தும் எல்லா குழந்தைகளும் ஏன் பள்ளிக்கு வரவில்லை என யோசித்தார். அதற்காக கிராமங்கள் தோறும் பயணித்தார். நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் வழியே சென்ற போது மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனிடம் நீ ஏன் பள்ளிக்கூடம் போகவில்லை, என காமராஜர் கேட்டபோது அதற்கு அந்தச் சிறுவன் பள்ளிக் கூடம் போனால் யாரு சோறு போடுவா எனக் கேட்டான்.
அதற்கு காமராஜர் சோறு போட்டா பள்ளிக்கூடம் வருவியா என கேள்வி கேட்க, வருவேன் என்று சொன்னானாம் அந்தசிறுவன். அதன் விளைவாக உருவானது தான் பகல் உணவு என்னும் மதிய உணவுத் திட்டம்.படிக்கும் பிள்ளைகளின் பசி போக்கும் பகல் உணவு திட்டத்தில் உணவு செலவுக்காக வரி போடவும் தயங்க மாட்டேன் ஒருவேளை அதில் சிரமம் ஏற்பட்டால் மற்ற வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஊர் ஊராகச் சென்று பிச்சை எடுக்கவும் தயங்க மாட்டேன் எனக்கூறி பாலகர்களின் பசி போக்கி கல்வி கற்கவும் வழி வகுத்தார்.தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத இந்த திட்டத்தை அன்றைய பாரத பிரதமர் நேரு பாராட்டினார்.
ஆசிரியர்களுக்கான நலத்திட்டங்கள்
கல்வி எனும் அழியாத செல்வத்தை வழங்க வேண்டியது ஆசிரியர்களுடைய அறப்பணியாகும்.அது தொழில் அல்ல தொண்டு. அவர்கள் பெறுவது சம்பளம் அல்ல சன்மானம் என்பதை உணர்ந்த காமராஜர் ஆசிரியர்களுக்குபணி நிரந்தரம், ஊதிய உயர்வு, ஓய்வூதியம் ஆகியவை கிடைக்க வழிவகை செய்தார்.
கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் நல்ல நிலையில் இருந்தால் தான் சிறப்பானதொரு கல்வியை மாணவர்களுக்கு கற்றுத் தர முடியும் என்பதை உணர்ந்த காமராஜர் ஆசிரியர்களுக்கு பல்வேறு வகையான சலுகைகளையும் வழங்கினார். சமூகத்தில் ஆசிரியர்களுக்கென்று தனி மதிப்பும் மரியாதையும் அன்று தரப்பட்டது.
பெருந்தலைவர்
அறநெறியில் நின்று வாழ்ந்தவர் காமராஜர். பாரதத்தின் விடுதலைக்கு பாடுபட்டவர். தலை நிமிர்ந்த தமிழகத்தை உருவாக்கிட அயராது உழைத்த காமராஜர் ஒரு தேசப்பற்றாளர். தியாகசீலர். எம்.எல்.ஏ., எம்.பி., முதல்வர் என்றெல்லாம் இருந்தாலும் கூட மக்கள் அவரை பெருந்தலைவர் என்றே கொண்டாடினார்கள்.
நற்பணிகளாலும், நற்பண்புகளாலும் தியாகத்தாலும் உயர்ந்த நிலைக்கு வர முடியும் என்பதற்கு உதாரணமாய் திகழ்ந்தவர் காமராஜர். அவரது வாழ்க்கை வரலாறுகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்து அவரது பிறந்த நாளான இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி மகிழ்வோம்.
-செ. மணிவண்ணன்
முதுகலை ஆசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளிதினைக்குளம்