பழுதான கூட்டுறவு வங்கி கட்டடம் வாடிக்கையாளர்கள் அச்சம்

சங்கராபுரம், : மத்திய கூட்டுறவு வங்கியின் சங்கராபுரம் கிளை கட்டடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால் வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சங்கராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சங்கராபுரம் கிளை இயங்கி வருகிறது. வங்கியில் மேலாளர், உதவி மேலாளர் மற்றும் பணியாளர்கள் என 7 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த வங்கி கட்டடம் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.

தற்போது கட்டடம் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து இடியும் நிலையில் உள்ளது.

பழுதடைந்த கட்டடத்தை சரி செய்யக்கோரி கூட்டுறவு வங்கி தலைமையகத்துக்கு வங்கியின் சார்பில் பலமுறை கடிதம் அனுப்பியும் கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் இதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

வங்கி கட்டடம் இடிந்து விழுமோ என்ற அச்சத்துடன் வாடிக்கையாளர்கள் சென்று வருகின்றனர். எனவே, பழுதடைந்த நிலையில் உள்ள வங்கி கட்டடத்தை விபத்து ஏற்படும் முன் சீரமைக்க கலெக்டர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வங்கி ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement