கட்டி முடிக்காத குடியிருப்புகளுக்கும் வரிவிதிப்பு ஆலந்துார் மண்டல குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு
ஆலந்துார், சில வீடுகளுக்கு இரண்டு வரி வசூலிக்கப்படுவதுடன், கட்டி முடிக்கப்படாத குடியிருப்புகளுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளதாக, ஆலந்துார் மண்டல குழு கூட்டத்தில், கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.
ஆலந்துார் மண்டல குழு கூட்டம், தலைவர் சந்திரன் தலைமையில், சில நாட்களுக்கு முன் நடந்தது. மண்டல உதவி கமிஷனர் முருகதாஸ், செயற்பொறியாளர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:
தி.மு.க., 159வது வார்டு, அமுதபிரியா: வார்டில் பல்வேறு இடங்களில் குடிநீர் பிரச்னை நிலவுகிறது. குடிநீர் வாரியத்திடம் புகார் அளித்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. திரு.வி.க., தெருவில் விபத்துகள் அதிகம் நடப்பதால் வேகத்தடை அமைக்க வேண்டும்.
தி.மு.க., 167வது வார்டு, துர்காதேவி: கடந்த மழையின்போது, நங்கநல்லுார் 46வது தெரு கடுமையாக பாதிக்கப்பட்டது. இம்முறை அப்பிரச்னை ஏற்படாமல் இருக்க, மழைநீர் வடிகால் பணி நடக்கிறது. மழைக்காலம் நெருங்கும் நிலையில், இதுவரை பணிகள் முடிக்கப்படவில்லை. பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
அ.தி.மு.க., 157வது வார்டு, உஷாராணி: மணப்பாக்கம், பி.ஆர்.ஆர்., சாலையில் உள்ள மழைநீர் வடிகால் மெட்ரோ திட்டப் பணிக்காக மூடப்பட்டது. இதனால், சிறு மழை பெய்தால் மழைநீர் குளம்போல தேங்குகிறது.
மேலும், துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. போக்குவரத்து நிறைந்த அச்சாலையில், மழைநீர் செல்ல உடனடி ஏற்பாடு செய்ய வேண்டும்.
தி.மு.க., 164-வது வார்டு, தேவி: வார்டில் சுகாதார மையங்கள் திறக்கப்பட்டாலும், முறையாக மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்படாததால் பொதுமக்கள் தவிக்கின்றனர். எனவே, உரிய மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்க வேண்டும்.
தி.மு.க., 160வது வார்டு, பிருந்தாஸ்ரீ: கட்டுமான கழிவு அகற்றும் தனியார் நிறுவனத்தின் குழுவில், கவுன்சிலர்கள் இணைக்கப்பட வேண்டும்.
தி.மு.க., 163வது வார்டு, பூங்கொடி: ஆதம்பாக்கம், கருணீகர் சாலை, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. அச்சாலையில், காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
தி.மு.க., 156வது வார்டு, செல்வேந்திரன்: சில சாலைகளை 'மில்லிங்' செய்து, 30 நாட்களுக்கு மேல் ஆகின்றன. போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. குடிநீர் வாரியத்தினர் புதிய சாலையை பள்ளம் தோண்டி சேதப்படுத்தியுள்ளனர்.
தி.மு.க., 162வது வார்டு, சாலமோன்: சில வீடுகளுக்கு இரண்டு வரி வசூலிக்கப்படுகிறது. குடியிருப்புகள் கட்டி முடிக்கப்படாமலேயே வரி விதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
மண்டல குழு தலைவர் சந்திரன் பேசியதாவது:
கவுன்சிலர்களின் கோரிக்கைகளை அதிகாரிகள் உடனுக்குடன் நிறைவேற்றி தர வேண்டும். குடிநீர் பிரச்னை பல வார்டுகளில் எழுந்துள்ளது. குடிநீர் வாரியம் தனி கவனம் செலுத்த வேண்டும்.
குடிநீர் வாரிய பணிகள் நடக்கும் இடத்தில், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நேரில் சென்று கண்காணிக்க வேண்டும். அரசுக்கு நல்ல பெயரையும், அவப்பெயரையும் ஏற்படுத்துவது அதிகாரிகள் தான். அதனை மனதில் கொண்டு செயல்படுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில், 27 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
மேலும்
-
உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடும் எங்களுக்கு வெறும் ரூ.2000 தானா? உறுமும் உடன் பிறப்புகள்
-
பழுதான கூட்டுறவு வங்கி கட்டடம் வாடிக்கையாளர்கள் அச்சம்
-
இன்றைய மின்தடை புதுச்சேரி
-
மது குடித்தவர் இறப்பு
-
பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் நியமனத்தில் ஊழல்; மாஜி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
-
விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்