'காக்கா ஆழி'யை காலக்கெடு நிர்ணயித்து அகற்ற சதுப்பு நில ஆணையத்திற்கு தீர்ப்பாயம் உத்தரவு
சென்னை, 'காக்கா ஆழி'யை காலக்கெடு நிர்ணயித்து அகற்றுவதற்கான தீர்வை, தமிழ்நாடு மாநில சதுப்பு நில ஆணையம் முன்வைக்க வேண்டும் என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தென் அமெரிக்க மஸ்ஸல் எனப்படும், 'காக்கா ஆழி' வெளியிடும் துர்நாற்றம் உடைய கசடுகளால், இறால், மீன் உள்ளிட்ட கடல் உயிரிகள் வாழ முடியாத நிலை ஏற்படுகிறது.
இதனால், பழவேற்காடு ஏரி போன்ற உப்பங்கழிகளை நம்பியிருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
எனவே, காக்கா ஆழியை அழிக்க உத்தரவிடுமாறு, குமரேசன் சூளுரன் என்பவர், தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக தீர்ப்பாயத்தில் ஆஜரான, தமிழ்நாடு மாநில சதுப்பு நில ஆணையத்தின் உறுப்பினர் செயலர் சீனிவாஸ் ரெட்டி, என்.சி.எஸ்.சி.எம்., எனப்படும், நிலையான கடலோர மேலாண்மைக்கான தேசிய மையம் அளித்த அறிக்கையின் அம்சங்களை எடுத்துக் கூறினார்.
மனிதர்களை பயன்படுத்தியோ அல்லது இயந்திரத்தை பயன்படுத்தியோ, 'காக்கா ஆழி'யை அகற்றுவதை தேசிய மையம் ஏற்கவில்லை. ஆனாலும், துரதிர்ஷ்டவசமாக, காக்கா ஆழியை அகற்றுவதற்கான எந்த மாற்று வழிமுறையும் அறிக்கையில் இல்லை.
பழவேற்காடு பகுதியில் நீர்வளத் துறை, 1,200 மீட்டர் நீளத்திற்கு துார் வாரியது. அனல் மின் நிலையத்தின் சாம்பலை அகற்றுவது மட்டுமே, அதன் நோக்கமாக இருந்தது.
இந்தப் பிரச்னையில், நிலையான கடலோர மேலாண்மைக்கான தேசிய மையத்தின் இறுதி அறிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை.
இந்த விஷயத்தை தமிழக அரசிடம் எடுத்துரைத்து, ஒரு காலக்கெடுவை நிர்ணயித்து, காக்கா ஆழியை அகற்றுவதற்கான தீர்வை, தமிழ்நாடு மாநில சதுப்பு நில ஆணைய உறுப்பினர் செயலர் சீனிவாஸ் ரெட்டி வழங்க வேண்டும்.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் 29ல் நடக்கும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
***