14 வயது முதல் 'பயங்கரம்' தான் 59 வயதிலும் பழக்கத்தை விட்டபாடில்லை

4

சென்னை: ஆந்திராவில் பதுங்கி இருந்த பயங்கரவாதி அபுபக்கர் சித்திக், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு கோடிகளை குவித்துள்ள நிலையில், அவரின் வங்கி கணக்கு மற்றும் சொத்து விபரங்களை, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.


நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக், 59; கோவை தொடர் குண்டுவெடிப்பு, ஹிந்து தலைவர்கள் கொலை என, பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்; 30 ஆண்டுகளுக்கு பின், ஆந்திர மாநிலத்தில், தமிழக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ஜிகாதியாக அறிவிப்பு



இவர், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு, கோடிக்கணக்கில் சம்பாதித்து இருப்பது தெரியவந்துள்ளது. இவரின் வங்கி கணக்கு, சொத்து விபரம் உள்ளிட்டவற்றை, தமிழகம் மற்றும் ஆந்திர மாநில போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து, தமிழக போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:



கோவை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளியான பாஷாவால் மூளைச்சலவை செய்யப்பட்ட அபுபக்கர் சித்திக், தன், 14வது வயதில் பயங்கரவாத செயலில் ஈடுபட துவங்கி உள்ளார்.


தன்னை புனித போர்புரியும் ஜிகாதியாக அறிவித்து, தொடர்ந்து பயங்கரவாத செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்; புத்தக வெடிகுண்டு தயாரிப்பதில் கெட்டிக்காரர். கடந்த 1995ல், தன் சொந்த ஊரில், ஹிந்து முன்னணி பிரமுகர் தங்க முத்துகிருஷ்ணனை கொலை செய்ய, பார்சலில் புத்தக வெடிகுண்டுகளை அனுப்பினார்.



அதை பிரித்து பார்த்த போது, வெடிகுண்டுகள் வெடித்து தங்க முத்துகிருஷ்ணனின் மனைவி உயிரிழந்தார்.

புத்தக வெடிகுண்டு



அதேபோல, மயிலாடுதுறையை சேர்ந்த ஹிந்து அமைப்பு நிர்வாகி ஜெகவீரபாண்டியன் என்பவரை கொலை செய்ய, பார்சலில் புத்தக வெடிகுண்டுகளை அனுப்பினார்.



ஆனால், தபால் நிலையத்திலேயே கண்டறியப்பட்டு, செயலிழப்பு செய்யப்பட்டது. இதனால், ஜெகவீரபாண்டியன உயிர் பிழைத்தார்.


கோவை மற்றும் மதுரையிலும் பெட்ரோல் குண்டுகளை வீசி, சிறைத்துறை அதிகாரிகள் இருவரை கொலை செய்துள்ளார். 1998ம் ஆண்டு கோவையில் தொடர் குண்டு வெடிப்பு நடத்திய பின், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு தப்பிச் சென்றுள்ளார். அங்குள்ள பயங்கரவாதிகள் தான் அடைக்கலம் கொடுத்துள்ளனர்.


அடிக்கடி, 'கெட்அப்' மாற்றிக்கொள்ளும் அபுபக்கர் சித்திக், தன் பெயரை அமானுல்லா என மாற்றி, போலி ஆவணங்கள் வாயிலாக ஆதார், ரேஷன் கார்டு, காஸ் இணைப்பு பெற்றுள்ளார். போலி பாஸ்போர்ட்டில் சவுதி அரேபியாவும் சென்று வந்துள்ளார்.


ஒருமுறை திருப்பூருக்கும், கைதாவதற்கு சில மாதங்களுக்கு முன், கோவைக்கும் வந்து சென்றது தெரியவந்துள்ளது. துவக்கத்தில் ஜவுளி வியாபாரி போல வலம் வந்த அபுபக்கர் சித்திக், மும்பையில் இருந்து இடம்பெயர்ந்து ஆந்திரா வந்துள்ளார்.


மனைவி சாய்ரா பானுவுடன் வசித்தவர், ரியல் எஸ்டேட் தொழிலில் பல கோடிகளை
குவித்துஉள்ளார்.

மூளைச்சலவை



இதனால், அவரின் வங்கி கணக்கு, சொத்து விபரங்களை ஆய்வு செய்யும் பணி நடக்கிறது. அபுபக்கர் சித்திக், முஸ்லிம் இளைஞர்களை மூளைச்சலவை செய்யும் வேலையிலும் ஈடுபட்டு வந்துஉள்ளார்.



ஆனால், தான் எதிர்பார்த்த அளவுக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என, வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement