மனு கொடுக்க வந்த பொதுமக்களை போலீசார் தடுத்ததால் வாக்குவாதம்

கடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்புக் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்களை, போலீசார் உள்ளே செல்ல அனுமதி மறுத்ததால் பொதுமக்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

குறிஞ்சிப்பாடி அடுத்த சேராக்குப்பத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்புக் கூட்டத்தில் மனு அளிக்க வந்தனர். கலெக்டர் அலுவலக நுழைவாயில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பொதுமக்கள் அனைவரையும் கலெக்டர் அலுவலகத்திற்குள் விட முடியாது என கூறி அனுமதி மறுத்தனர்.

மனுவுடன் ஓரிருவர் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்படும் என கூறினர். இதனால், பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எங்களுக்கு கொடுத்துள்ள உத்தரவுபடி தான் செயல்பட முடியும் என போலீசார் தெரிவித்தனர். அரை மணி நேர போராட்டத்திற்குப்பின் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

குறைகேட்புக் கூட்டத்தில் கிராம மக்கள் அளித்த மனுவில்; சேராக்குப்பத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலை, பொதுமக்கள் எதிர்ப்பை மீறி இந்து அறநிலையத்துறையுடன் சேர்த்ததையும், திருவிழா நடத்த கிராம பொதுமக்களை கலந்து ஆலோசிக்காமல் முடிவெடுக்கும் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், கோவிலை பொதுமக்களிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

Advertisement