பயன்பாடு இல்லாத குடிநீர் தொட்டிகளை இடித்து... அகற்றுங்க: சேதமானவைகளால் விபரீதம் ஏற்படும் அபாயம்

விருதுநகர் மாவட்டம் ஊராட்சிகள் நிறைந்த மாவட்டம்.ஒவ்வொரு ஊராட்சிகளும் உள்ளூர் குடிநீர் ஆதாரம் மற்றும் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் பெறப்பட்டு மேல்நிலைத் தொட்டிகள் மூலம் நிரப்பி மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பல ஊராட்சிகளில் 30 முதல் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டிகள் பல சேதம் அடைந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் இடிந்து விழும் அபாயத்தில் காணப்பட்டதால் இவற்றில் தண்ணீர் நிரப்புவதை நிறுத்தி புதியதாக மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.
எம் .எல். ஏ .தொகுதி மேம்பாட்டு நிதி , மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் பல ஊராட்சிகளில் புதியதாக மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டு தற்போது குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 30ஆயிரம் லிட்டர் முதல் 40 ஆயிரம் லிட்டர் அளவிலான மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது. புதிய மேல்நிலை குடிநீர் தொட்டிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் அனைத்து பகுதிக்கும் தடையின்றி தண்ணீர் கிடைத்து வருகிறது.
இந்த நிலையில் பழைய குடிநீர் மேல் தொட்டிகள் சிமெண்ட் காரைகள் பெயர்ந்தும் இதன் துாண்கள் பலவீனமடைந்த நிலையில் காணப்படுகின்றன. மேலும் இந்த பழைய குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் ஊராட்சிகளின் நடுப்பகுதியிலும் முக்கிய தெரு வீதியிலும் அமைந்துள்ளது. விடுமுறை தினங்களிலும் உள்ளூர் பொங்கல் திருவிழா போன்ற சமயங்களிலும் இந்த மேல் நிலை தொட்டிக்கு அடியில் கிராமத்தினரும் சிறுவர்களும் குழந்தைகளும் அமர்ந்து விளையாடியும் பொழுது போக்கி வருகின்றனர்.
சேதமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து அவ்வப்போது சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கீழே விழுந்து வருகின்றன.ஊராட்சிகளில் விபத்து ஏற்படும் முன்பு மேல்நிலை குடிநீர் தொட்டிகளை அகற்ற வேண்டும் என்று மக்கள் பலமுறை வலியுறுத்திய போதும் போதுமான நிதி வசதி இல்லை எனக் கூறி ஊராட்சி நிர்வாகங்கள் பழைய மேல்நிலைத் தொட்டிகளை அகற்றாமல் உள்ளனர்.
இதனால் ஊராட்சிகள் தோறும் ஒன்று முதல் இரண்டு சேதம் அடைந்த மேல்நிலைத் தொட்டிகள் பயன்பாட்டில் இல்லாமல் காட்சி பொருளாக உள்ளது. இவற்றை இடித்து அகற்ற திட்ட மதிப்பீடு செய்து ஒப்பந்ததாரர்கள் மூலம் பாதுகாப்பான முறையில் சேதமடைந்த பயன்படாத மேல்நிலை குடிநீர் தொட்டிகளை அகற்றி மக்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும்
-
ரயில் விபத்தில் இறந்த மாணவர்கள் குடும்பத்திற்கு திருமாவளவன் உதவி
-
மனு கொடுக்க வந்த பொதுமக்களை போலீசார் தடுத்ததால் வாக்குவாதம்
-
அமலோற்பவம் பள்ளியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
-
சிதம்பரம் வரும் அ.தி.மு.க., பொதுச்செயலாளரை வரவேற்க பாண்டியன் எம்.எல்.ஏ., அழைப்பு
-
சிதம்பரம் அரசு கல்லுாரியில் 16ம் தேதி இறுதி கட்ட கலந்தாய்வு
-
விருதை கோவில்களில் சதுர்த்தி வழிபாடு