'ஓரணியில் தமிழ்நாடு' பெயரில் ஸ்டிக்கர் ஒட்டி ஏமாற்றும் தி.மு.க., அ.தி.மு.க., குற்றச்சாட்டு

மதுரை: 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் வீட்டில் ஸ்டிக்கரை மட்டும் ஒட்டிவிட்டு உறுப்பினர் சேர்ந்ததாக கணக்கெடுத்துக் கொள்கின்றனர்' என அ.தி.மு.க., மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் தெரிவித்தார்.

மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி மேற்கொள்ளும் எழுச்சி பயணத்தை கண்டு முதல்வர் ஸ்டாலினுக்குஜூரம் வந்து விட்டது. அவரது மகன் உதயநிதிக்கு நடுக்கம் வந்து விட்டது. தங்களது இருப்பைக் காட்டிக் கொள்ள தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.

'ஓரணியில் தமிழ்நாடு' என்ற உறுப்பினர் சேர்க்கையில் 91 லட்சம் பேர் சேர்ந்ததாக பொய் கூறுகின்றனர்.

தமிழகத்தில் உள்ள 6 கோடி வேட்பாளர்களில் 2 கோடிக்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.,வில்உள்ளனர்.பழனிசாமி மேற்கொள்ளும் பயணத்தின் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் ஆதரவளிக்கும் நிலை உள்ளது. இதையெல்லாம் உளவுத்துறை மூலம் அறிந்த தி.மு.க., வட்டாரம் அதிர்ந்து போய் உள்ளது.

தி.மு.க., கொடுத்த 525 வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. இதை மடைமாற்றம் செய்ய 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற உறுப்பினர் சேர்க்கையை நடத்துகின்றனர்.

வீட்டில் ஸ்டிக்கரை மட்டும் ஒட்டிவிட்டு உறுப்பினர் சேர்ந்ததாக கணக்கெடுத்துக் கொள்கின்றனர். அ.தி.மு.க., கொண்டு வந்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஓட்டும் தி.மு.க., இதிலும் ஸ்டிக்கர் ஒட்டி மக்களை ஏமாற்றுகிறது.

இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின் மீது மிகப்பெரிய எதிர்ப்பு அலை வீசுகிறது. 2011 தேர்தலில் தி.மு.க., எதிர்க்கட்சி அந்தஸ்து இழந்தது போல் 2026 தேர்தலிலும் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கும் என்றார்.

Advertisement