என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்கள் இல்லை 5 , 8ம் வகுப்பு மாணவர்கள் அவதி

சென்னை: ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கான பாடப்புத்தகங்களை என்.சி.இ.ஆர்.டி., இன்னும் வெளியிடாததால், மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் பாடத்திட்ட பள்ளிகளுக்கு, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான, என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை வடிவமைத்து, அச்சிட்டு விற்கிறது.
இந்தாண்டு, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பாடங்கள் முழுமையாக மாற்றப்பட்டு, புதிய பாடப்புத்தகங்களாக வடிவமைக்கப்படுவதாக, என்.சி.இ.ஆர்.டி., ஏற்கனவே அறிவித்தது.
அதன்படி, புதிய பாடப்புத்தகங்கள் தயாராக ஒரு மாதம் முதல் ஒன்றரை மாதங்கள் வரை ஆகும் எனவும், அதுவரை, 'பிரிட்ஜ் கோர்ஸ்' என்ற பாடத்திட்டத்தை வடிவமைத்து, என்.சி.இ.ஆர்.டி., இணையதளத்தில், பி.டி.எப்., வடிவில் பதிவேற்றுவதாகவும் தெரிவித்தது.
ஆனால், பள்ளிகள் திறந்து பாடவேளைகள் துவங்கி நான்கு மாதங்களான நிலையிலும், எட்டாம் வகுப்புக்கான ஆங்கில பாடம் தவிர, மற்ற பாடங்களுக்கான புத்தகங்கள் இதுவரை விற்பனைக்கு வரவில்லை.
அடுத்த வாரம், பருவ தேர்வுகள் நடக்க உள்ள நிலையில், எதன் அடிப்படையில் தேர்வெழுதுவது என, தெரியாமல் ஆசிரியர்களும், மாணவர்களும், குழப்பத்தில் உள்ளனர்.
அதேபோல, ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகங்களும் குறைந்தளவே விற்பனைக்கு வந்து, உடனடியாக விற்றுத் தீர்ந்து விட்டதாகவும், புத்தகங்கள் எடுத்து வராத குழந்தைகளை ஆசிரியர்கள் திட்டுவதால், குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும், பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.