அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி: தம்பதி மீது வழக்குப் பதிவு

புதுச்சேரி : முன்னாள் கவர்னரின் அக்கா பெயரை சொல்லி அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5.90 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கருவடிக்குப்பம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜன்.

இவரது மகன் ராஜ் பரத், இன்ஜினியரிங் படித்து விட்டு, தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். ராஜ் பரத் நண்பரான மதன் மூலம் லாஸ்பேட்டை, பெத்துச் செட்டிப்பேட்டையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் முத்துக்குமார் என்பவர் கடந்த 2024ம் ஜனவரி மாதம் அறிமுகமாகியுள்ளார்.

இதையடுத்து, முத்துக்குமார், முன்னாள் கவர்னர் அக்கா தனக்கு நன்கு பழக்கமானவர் என்றும், அவரின் மூலமாக சிலருக்கு புதுச்சேரியில் அரசு வேலை வாங்கி தந்துள்ளதாகவும், அவரிடம் சொல்லி ராஜ்பரத்திற்கு எல்.டி.சி., வேலை வாங்கி தருவதாக தெரிவித்துள்ளார்.

இதைநம்பிய, ராஜன் தனது மகனின் அரசு வேலைக்காக முத்துக்குமாரின் மனைவி சிவசங்கரி பெயரில் உள்ள வங்கி கணக்கிற்கு 2 தவணைகளாக 8 லட்சம் ரூபாய் அனுப்பியுள்ளார். மேலும், முத்துக்குமரனிடம் ரொக்கமாக ரூ. 10 ஆயிரம் என மொத்தம் 8 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்.

ஆனால், முத்துக்குமார் அரசு வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்ததால், பணத்தை ராஜன் திரும்ப கேட்டு உள்ளார். அதன்படி, பல்வேறு தவணைகளாக முத்துக்குமார் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை திரும்ப கொடுத்துள்ளார். ஆனால், மீதமுள்ள 5 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை திரும்ப தரவில்லை.

இதுகுறித்து ராஜன் அளித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் அரசு வேலை வாங்கி தருவதாக பணமோசடியில் ஈடுபட்டதாக முத்துக்குமார், அவரது மனைவி சிவசங்கரி ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement