சிர்சி - குமட்டா நெடுஞ்சாலை தரம் உயர்த்தும் பணி மந்தம்

பெங்களூரு: சிர்சி - குமட்டா நெடுஞ்சாலை பணிகள் தாமதமாவதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

உத்தரகன்னடா மாவட்டத்தின், சிர்சி - குமட்டா தேசிய நெடுஞ்சாலை - 766ஐ தரம் உயர்த்தும் பணிகள் துவங்கி மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் முடியவில்லை. நிர்ணயித்த காலக்கெடு முடிந்த பின்னும், ஒப்பந்த நிறுவனம் பணிகளை முடிக்காமல் தாமதம் செய்கின்றனர். இதை தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.

பள்ளங்களாக தென்படும் சாலையில், பயணம் செய்ய முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். சமூக வலைதளங்கள் வழியாக, பலரும் சாடுகின்றனர்.

இதற்கிடையே, சமூக ஆர்வலர் ரவி கிரண் படவர்தனா என்பவர், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுக்கு, சுற்றுலா சலுகை அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறியதாவது:

கோகர்ணாவுக்கு அதிகாரிகள் சுற்றுலா செல்ல, நான் ஏற்பாடு செய்கிறேன். அனைத்து செலவுகளையும், நானே ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அதிகாரிகள் பஸ்சின் இறுதி இருக்கையில் அமர்ந்து பயணம் செய்ய வேண்டும். அப்போது தான் மக்கள் எந்த அளவுக்கு கஷ்டத்தை அனுபவிக்கின்றனர் என்பது, அதிகாரிகளுக்கு புரியும், அந்த கஷ்டத்தை தெரிந்து கொள்ள, அதிகாரிகள் பஸ்சில் பயணம் செய்ய வேண்டும்.

சிர்சியில் இருந்து குமட்டாவுக்கு செல்லும் சாலை நெடுகிலும் பள்ளங்கள் தென்படுகின்றன. மூன்று ஆண்டுகளாக சாலையை புதுப்பிக்கவில்லை. இந்த சாலையில் 20 கி.மீ., விட அதிகமான வேகத்தில் வாகனத்தை ஓட்டவே முடியாது. சாலையை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தும் பணிகளை, ஒப்பந்ததாரர் மந்தமாக செய்கிறார்.

இவ்வாறு கூறினார்.

Advertisement