இரு பிரிவினரிடையே மோதல்; சிரியாவில் 37 பேர் பலி

டமாஸ்கஸ்; சிரியாவில் ட்ரூஸ் மதத்தினர் மற்றும் சன்னி பெடோயின் பழங்குடியினர் இடையே ஏற்பட்ட மோதலில், இரண்டு குழந்தைகள் உட்பட 37 பேர் பலியாகினர்.

மேற்கு ஆசிய நாடான சிரியாவில், ஸ்வீடா மாகாணத்தில் ட்ரூஸ் மதத்தைச் சேர்ந்தவர்களும், சன்னி பெடோயின் பழங்குடியினரும் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். ட்ரூஸ் என்பது 10ம் நுாற்றாண்டில் உருவான ஷியா முஸ்லிம் பிரிவில் இருந்து உருவான இஸ்மாயிலிசத்தின் அடிப்படையாகக் கொண்டதாகும். ஆனால், இவர்கள் முஸ்லிம்கள் இல்லை.

சிரியாவில் நடந்த, 14 ஆண்டுகால உள்நாட்டு போரின்போது, முன்னாள் அதிபர் பஷர் அசாத் அரசுக்கு எதிராக ட்ரூஸ் போராளிகள் போராடினர். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு, சன்னி பெடோயின் பழங்குடியினர், ட்ரூஸ் மதத்தைச் சேர்ந்த காய்கறி விற்பனையாளர் ஒருவரை தாக்கி பணத்தை கொள்ளையடித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம், இருபிரிவினர் இடையேயான பெரும் மோதலுக்கு வழிவகுத்தது. இருதரப்பும் ஆயுதங்களைக் கொண்டு தாக்கிக் கொண்டதில், 37 பேர் உயிரிழந்துள்ளனர். நுாற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சிரியா உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து ஸ்வீடா மாகாணத்தில் அமைதியை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் சிரியா அரசு இறங்கியுள்ளது. சோதனைச் சாவடிகளில் ராணுவ வாகனங்கள் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Advertisement