'கோவையின் தொழில்முனைவுப் பார்வை மாற வேண்டும்'

கோவை; சி.ஐ.ஐ., கோயம்புத்துார் நெக்ஸ்ட் சார்பில், 'ஜி.சி.சி., கோவை உச்சி மாநாடு 2025' நேற்று நடந்தது.
'கோவை - இந்தியாவின் இரட்டை இன்ஜின் ஜி.சி.சி., ஹப்: முதல் நிலை நகரங்களின் நிபுணத்துவத்தில், இரண்டாம் நிலை நகரின் செலவினத்தில் தொழில்துறை பொறியியலும் டிஜிட்டல் புத்தாக்கமும் சந்திக்கும் இடம்' என்ற கருப்பொருளில், இம்மாநாடு நடந்தது. கோவையின் தொழில்வளர்ச்சியில், ஜி.சி.சி.,கள் குறித்து பல்வேறு அமர்வுகளில் உரை நிகழ்த்தப்பட்டது.
துவக்க விழாவில், கோவை ஜி.சி.சி., ஆய்வறிக்கையை வெளியிட்டு, தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தியாகராஜன் பேசுகையில், ''திவான் பகதுார் ரத்தினசபாபதி முதலியார் சிறுவாணியை கோவைக்கு கொண்டு வந்தார்.
ஜி.டி.நாயுடு, ஆர்தர் ஹோப்புடன் இணைந்து பொறியியல் கல்வியைக் கொண்டு வந்தார். பொதுக்கட்டமைப்புகளை உருவாக்கி, தொழில்முனைவும், மக்கள் நலனையும் ஒரு சேரக் கொண்டிருந்த பார்வையே, கோவையின் அடையாளம்.
இந்த வரலாற்றை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது. அதே பாரம்பரியத்தை, இன்னும் கூடுதல் முற்போக்கு, திறந்த மனது, புத்தாக்கத்துடன் முன்னெடுக்க வேண்டும்,” என்றார்.
சி.ஐ.ஐ., தமிழ்நாடு முன்னாள் தலைவர் ஜெய்ராம் வரதராஜ் பேசியதாவது:
முதன்முதலில் பம்ப், மோட்டார், ஜவுளித்துறை இயந்திரங்கள் என உற்பத்தி செய்து வளர்ந்த நகரம் கோவை. தமிழகத்தில் இரண்டாவது பெரிய தொழில்நகரம், தேசிய அளவில் முதல் 10 நகரங்களில் ஒன்று என்ற பெருமைகளைக் கொண்டுள்ளோம்.
உலகத் தர உற்பத்தியை 30 சதவீத குறைந்த செலவினத்தில் உருவாக்குகிறோம் என பெருமை கொள்கிறோம். ஆனால், நமது தொழில்முனைவுப் பார்வை மாற வேண்டும்.
குறைந்த செலவினம் என்ற சிறப்பம்சத்தை மட்டுமே முன்வைக்கக்கூடாது. எனவே, உயர்தர தொழில்முனைவுத் திறனைக் கொண்டுள்ள நாம், உயர்தர வர்த்தகம் என்ற இலக்கை நோக்கியும் முன்னேற வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
சி.ஐ.ஐ., கோவை தலைவர் ராஜேஷ் துரைசாமி, தென்பிராந்திய முன்னாள் தலைவர் நந்தினி, சி.ஐ.ஐ., தமிழ்நாடு ஜி.சி.சி., டாஸ்க்போர்ஸ் கன்வீனர் கெவின் ஜார்ஜ், கோவை கன்வீனர் மகாலிங்கம் ராமசாமி, சி.ஐ.ஐ., தமிழ்நாடு முன்னாள் தலைவர் சங்கர் வாணவராயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.