வார சந்தையிலும் வசூல் வேட்டை வியாபாரிகள், விவசாயிகள் அதிருப்தி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அத்தியூர், செட்டித்தாங்கல், தியாகதுருகம், உளுந்துார்பேட்டை, மடப்பட்டு உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாரசந்தை நடந்து வருகிறது. சிறு கிராமங்களில் நடக்கும் சந்தைகளில் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே விற்பனை நடக்கிறது.
பழமையான வாரசந்தையில் கால்நடை வியாபாரம் அதிக அளவில் நடக்கிறது. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கால்நடை விற்பனை செய்வதற்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் நேரடியாக அல்லது குத்தகைதாரர்கள் மூலமாக சுங்க வசூல் செய்யப்படுகிறது.
இது மட்டுமின்றி பொருட்களை விற்பனைக்கு கொண்டு வரும் வாகனங்கள் மற்றும் கால்நடைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கும் தனி சுங்க வரி வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு வசூலிக்கப்படும் பணம் உள்ளாட்சி நிர்வாகத்திற்கு வருவாயாக கிடைக்கிறது.
இந்நிலையில், போலீசாரின் கெடுபிடியால் வியாபாரிகள் விழி பிதுங்கி நிற்கின்றனர். சந்தை நடக்கும் ஊர் எல்லையில் நிற்கும் போலீசார், அத்தியாவசிய பொருட்கள், கால்நடைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை நிறுத்தி கட்டாய வசூல் செய்கின்றனர். அதைக் கடந்து சென்றாலும் உளுந்துார்பேட்டை, மடப்பட்டு, தியாகதுருகம் ஆகிய ஊர்களில் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசாரும் அவர்கள் பங்குக்கு வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டை நடத்துகின்றனர்.
இப்படி ஒவ்வொரு பகுதியில் வியாபாரிகளை மடக்கி பணம் வசூல் செய்வதால், வியாபாரிகள் பலர் நஷ்டம் அடைகின்றனர். இதனால், குறிப்பிட்ட சில சந்தைகளுக்கு வியாபாரிகள் செல்லவே தயங்குகின்றனர். வியாபாரிகள் வருகை குறைவதால் அத்தியாவசிய பொருட்கள் விலை மலிவாக கிடைப்பது இல்லை. கால்நடை விற்பனையிலும் நியாயமான லாபம் கிடைக்காமல் பொதுமக்களும், விவசாயிகளும் நஷ்டம் அடைகின்றனர்.
இது வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வாரச்சந்தை நடக்கும் ஊர்களில் போலீசார் நடத்தும் கட்டாய வசூல் வேட்டையை உயரதிகாரிகள் உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
காத்திருப்போம்...காத்திருப்போம்...காலங்கள் வந்துவிடும்; பாட்டு பாடி பதில் அளித்த ராமதாஸ்!
-
பாதுகாப்பற்ற படப்பிடிப்பு : ஒரே ஆண்டில் இரண்டு ஸ்டன்ட் நடிகர்கள் மரணம்
-
மிளகாய் பொடி தூவி, துப்பாக்கியால் சுட்டு இ.கம்யூ., பிரமுகர் படுகொலை; வாக்கிங்கின் போது பயங்கரம்
-
மும்பை ஏர்போர்ட்டில் சிக்கியது ரூ.62 கோடி கோகைன்: பிஸ்கட், சாக்லேட்டுகளில் கடத்திய பெண்
-
திருப்பரங்குன்றம் மலை விவகார வழக்கு: விசாரணையை ஒத்திவைத்தார் 3வது நீதிபதி
-
ஜம்மு காஷ்மீரில் 20 பேருடன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வேன்: 5 பேர் பலி