நேரம் நல்ல நேரம்... பா.ம.க., நிர்வாகிகளை இழுக்க தி.மு.க., - அ.தி.மு.க., தீவிர முயற்சி

பா.ம.க.,வில் நிலவி வரும் உட்கட்சி குழப்பத்தை சாதகமாக பயன்படுத்தி அக்கட்சி முக்கிய நிர்வாகிகளை தங்கள் கட்சிக்கு கொண்டு வர தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

பா.ம.க.,வில் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இருவரும் பரஸ்பரம் கட்சி நிர்வாகிகளை நீக்குவதும் நியமிப்பதும் என அன்றாடம் அரங்கேறி வருகிறது.



இருவரும் தங்களின் ஆதரவாளர்களை பொறுப்பாளர்களாக நியமனம் செய்வதும் எதிராக செயல்படுபவர்களை முக்கிய பொறுப்பாளராக இருந்தாலும் அதிலிருந்து நீக்கியும் வருகின்றனர்.


இது கட்சியில் பல ஆண்டுகளாக பொறுப்பாளர்களாக இருப்பவர்களுக்கு மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.


சிலருக்கும் தாங்கள் பொறுப்பில் இருக்கிறோமா இல்லையா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
பா.ம.க., வில் நிலவிவரும் இந்த உட்கட்சி குழப்பத்தை பயன்படுத்தி அதில் உள்ள முக்கிய நிர்வாகிகளை தங்கள் கட்சிக்கு கொண்டு வர கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., இடையே கடும் போட்டா போட்டி நிலவி வருகிறது.


இதில் ஆளுங்கட்சியான தி.மு.க.,வில் சேர 'ப விட்டமின்' துாண்டில் வீசி முக்கிய நிர்வாகிகளை தங்கள் கட்சிக்கு கொண்டு வர முயன்று வருகின்றனர்.



அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கணிசமான ஓட்டு வங்கி உள்ள பா.ம.க.,வின் முக்கிய நிர்வாகிகளை தங்கள் வசம் கொண்டு வந்து விட்டால் கூடுதல் பலம் கிடைக்கும் என்ற நோக்கில் தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் செயல்பட்டு வருவது பா.ம.க.,வின் தொண்டர்களை கலக்கமடையச் செய்துள்ளது.

Advertisement