ஏரி கரையை உடைத்து பாலம் கட்ட முயற்சி கிராம மக்கள் தடுத்ததால் பரபரப்பு

பாகூர் : கிருமாம்பாக்கத்தில் ஏரி கரையை உடைத்து பாலம் கட்ட மேற்கொண்ட பணியை, கிராம மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.

கிருமாம்பாக்கத்தில் பெரிய ஏரி, சின்ன ஏரி என இரண்டு ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள், கிருமாம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீருக்கு ஆதாரமாக இருந்து வருகிறது. இந்நிலையில், சமீப காலமாக பெரிய ஏரியில், நீர்பிடிப்பு பகுதியில் இருந்த நிலங்கள் மனைகளாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரியல் எஸ்டேட் கும்பல் ஒன்று, கிருமாம்பாக்கம் பெரிய ஏரியின் தெற்கு கரை பகுதியில் இருந்த 10க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டி, சுமார் 10 மீட்டர் அளவிற்கு பள்ளம் தோண்டி, பாலம் அமைக்க முயற்சித்தனர்.

தகவலறிந்த சார்க்காசிமேடு கிராம மக்கள் நேற்று அங்கு சென்று பணியை தடுத்தனர். தொடர்ந்து, அவர்கள், பனை மரங்களை வெட்டவும், கரையை உடைக்கவும் அனுமதி கொடுத்தது யார் என கேள்வி எழுப்பியதால், ரியல் எஸ்டேட் கும்பல், பணியை நிறுத்தி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

தொடர்ந்து, அந்த பள்ளத்தை கிராம மக்கள் பொக்லைன் இயந்திரம் மூலமாக மூடும் முயற்சியில் ஈடுபட்டனர். கரையை உடைக்க அனுமதி கொடுக்கப்பட்டிருந்தால், சம்மந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலை பகுதியை மனைகளாக பிரிக்கக் கூடாது என்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement