வள்ளலாரின் புகழை தி.மு.க., திட்டமிட்டு மறைக்கிறது: வடலுாரில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி ஆவேசம்

வடலுார் : அ.தி.மு.க., சார்பில், வடலுாரில் நடந்த 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பேசியதாவது:
2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும். ஸ்டாலின், 200 தொகுதியில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும் என பகல் கனவு காண்கிறார். விஞ்ஞான மூளை கொண்ட தி.மு.க., வினர் விவசாயிகளை ஏமாற்றுகின்றனர். நுாறு நாள் வேலை திட்டத்தை, 50 நாளாக குறைத்து, சம்பளத்தையும் குறைத்துள்ளனர்.
ரேஷனில் கூடுதல் சர்க்கரை, காஸ் மானியம் என கவர்ச்சிகரமாக பேசி, ஆட்சிக்கு வந்தபின், மக்களை ஏமாற்றியுள்ளனர். தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக, விதிகளை தளர்த்தி, 30 லட்சம் பேருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என, தற்போது அறிவித்துள்ளனர். நான்கு ஆண்டுகள் முடிந்து உங்களுடன் ஸ்டாலின் என, இப்போது தான் மக்களை சந்திக்க துவங்கி உள்ளனர்.
ஆட்சி துவங்கிய 2 ஆண்டுகளில், 30 ஆயிரம் கோடி தி.மு.க., கொள்ளையடித்ததாக முன்னாள் நிதி அமைச்சர் பேசிய ஆடியோ வெளியானது. இதுவரை ஸ்டாலின் அதற்கு பதில் சொல்லவே இல்லை.
அரசின் சாதனைகளை விளக்க, 4 ஐ.ஏ.எஸ்.,, அதிகாரிகளை நியமித்து ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வள்ளலாரின் புகழை மறைப்பதற்காக வேண்டுமென்றே திட்டமிட்டு இடத்தை கையகப்படுத்தி, வேறு துறைக்கு கொடுத்தது கண்டிக்கத்தக்கது. அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் இதற்கு விடிவு காலம் பிறக்கும்.
குறிஞ்சிப்பாடி சிப்காட் சீரமைக்கப்படும். கைத்தறி நெசவாளர்களின் வளர்ச்சிக்கு, 300 கோடி அ.தி.மு.க., ஒதுக்கியது.
வேளாண் அமைச்சர் தகுதி இல்லாதவர்களுக்கும், தி.மு.க., வினருக்கு மானிய விலையில் டிராக்டர் வழங்கி உள்ளார். அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் இதில் ஊழல் இருந்தால் விசாரிக்கப்படும். பெருமாள் ஏரியை துார் வார அ.தி.மு.க., ஆட்சியில் டெண்டர் விடப்பட்டது. பின்னர் ஆட்சிக்கு வந்த தி.மு.க., ஏரியை துார் வருவதாக கூறி அதிலிருந்த மண்ணை எடுத்து விற்று விட்டனர்.
முழு ஏரியும் துார்வாரப்படவில்லை என, விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க., ஆட்சி வந்ததும், முறையாக ஏரி துார்வாரி, அதிக நீர் பிடிப்பு ஏற்படுத்தப்படும். முந்திரி உடைக்கும் மகளிருக்கு மானிய விலையில் மின்சார இயந்திரம் வழங்கப்படும்.
இவ்வாறு பழனிசாமி பேசினார்.
மேலும்
-
சேலத்தில் ரவுடி வெட்டிக் கொலை; 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
-
சரோஜா தேவியின் இறுதி ஊர்வலம் துவங்கியது: சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு
-
இந்தியாவில் கால் பதித்தது டெஸ்லா; மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு
-
பினராயி விஜயன் பெயரில் மும்பை பங்குச்சந்தைக்கு வெடிகுண்டு மிரட்டல்!
-
645 பணியிடங்களுக்கு குரூப் 2, 2ஏ தேர்வு அறிவிப்பு
-
முத்துக்குமார சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேக விழா