114 வயது மாரத்தான் 'ஜாம்பவான்' பவுஜா சிங் சாலை விபத்தில் மரணம்!

5


சண்டிகர்: பஞ்சாபில் 114 வயது மாரத்தான் 'ஜாம்பவான்' பவுஜா சிங் சாலை விபத்தில், உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


பஞ்சாபைச் சேர்ந்த 114 வயது மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் பவுஜா சிங் ஜலந்தர்-பதான் கோட் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பியாஸ் கிராமத்தில் தனது வீட்டிற்கு வெளியே நடந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.


அக்கம் பக்கத்தினர், படுகாயங்களுடன் அவரை உடனடியாக மீட்டு தனியார் மருத்துவனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 'தலைப்பாகை சூறாவளி' என அழைக்கப்படும் பவுஜா சிங் மறைவு பல்வேறு தரப்பினரை சோகத்தில் ஆழ்த்தியது.

''பவுஜா சிங் முழு சீக்கிய சமூகத்திற்கும், குறிப்பாக இளைஞர்களுக்கும் ஒரு உத்வேகமாக இருந்தார்'' என சீக்கிய சமூக மக்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். இவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

யார் இந்த பவுஜா சிங்?




* பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டம் பியாஸ் பிண்டி கிராமத்தில் ஏப்ரல் 1ம் தேதி, 1911ம் ஆண்டு பவுஜா சிங் பிறந்தார்.



* இவர் தனது 89 வயதில் மாரத்தான் போட்டியில் பங்கேற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.


* 2003ம் ஆண்டு லண்டன் மாரத்தான் போட்டியில் 6 மணி நேரம் 2 நிமிடங்களில் இலக்கை அடைந்து 90 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் உலக சாதனை படைத்தார்.


* 2011ம் ஆண்டு தன்னுடைய 100வது வயதில், டொரோண்டோ வாட்டர்ப்ரண்ட் மாரத்தான் போட்டியை 8 மணி நேரம் 11 நிமிடங்கள் 6 வினாடிகளில் கடந்து அசத்தினார்.


* உலகின் முதல் 100 வயது நிரம்பிய மாரத்தான் 'ஜாம்பவான்' என்ற பெருமையை பெற்றார்.


* இவருக்கு 83 வயதில், அதாவது 1994ம் ஆண்டு இவரது 5வது மகன் குல்தீப் சிங் உயிரிழந்த பிறகு, மீண்டும் மாரத்தான் போட்டியில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement