ஷார்ஜாவில் இந்தியப் பெண் தற்கொலை: கேரள போலீசார் வழக்குப்பதிவு

1

திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் குழந்தையுடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கேரளாவில் வசிக்கும் அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், கணவர், மாமனார் உள்ளிட்டோர் மீது வரதட்சணை குற்றச்சாட்டின் கீழ் கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கேரளாவின் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் விபாஞ்சிகா மணி(32). இவர், நிதீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஷார்ஜாவில் வசித்து வந்தார். இவர்களுக்கு 1.5 வயதில் பெண் குழந்தை உள்ளது.


இந்நிலையில், கடந்த 8 ம் தேதி அவர் ஷார்ஜாவில் பேஸ்புக்கில் குறிப்பு எழுதி வைத்துவிட்டு குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டார். அவர் கைப்பட எழுதி வைத்த குறிப்பும் ஷார்ஜாவில் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில், கொல்லத்தில் நிபாஞ்சிகாவின் தாயார் கொல்லம் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், வரதட்சணை போதவில்லை எனக்கூறி, எனது மகளை, நிதீஷ் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தினார். நிதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் கறுப்பாக உள்ளதால், எனது மகளின் தலைமுடியை வெட்டி கொடுமைப்படுத்தினர். திருமணத்துக்கு மீறிய உறவில் இருந்ததை தட்டிக் கேட்டதால், விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினர் எனத் தெரிவித்துள்ளார்.


இதன் அடிப்படையில், கொல்லம் போலீசார் நிதீஷ் மீது, பிஎன்எஸ் சட்டப்பிரிவு 85( பெண்ணை கணவர் மற்றம் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்துதல்), 108( தற்கொலைக்கு தூண்டுதுல்) மற்றும் வரதட்சணை தடுப்பு சட்டம்ப்பிரிவு 3 ( வரதட்சணை வாங்கியதற்காக அபராதம்) மற்றும் 4( வரதட்சணை கேட்டதற்காக அபராதம் விதித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


இறந்த நிபாஞ்சிகாவின் உடலை சொந்த ஊர் கொண்டு வருவதற்கு தாயார் ஷார்ஜா கிளம்பி உள்ளார். இறந்த குழந்தையின் உடலை, நிதீஷ் வாங்கி தகனம் செய்ய முயற்சித்தார். இது குறித்த தகவல் அறிந்த நிபாஞ்சிகாவின் பெற்றோர் இந்தியத் தூதரகத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து குழந்தையின் உடலை தகனம் செய்ய அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

Advertisement