வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணிக்கான நோக்கம் என்ன? தேர்தல் கமிஷனிடம் விளக்கம் கேட்கும் தெலுங்கு தேசம்!

1

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்வதற்கான உண்மையான நோக்கத்தை தெளிவுபடுத்தும்படி, தலைமை தேர்தல் கமிஷனுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கடிதம் எழுதி உள்ளது. மேலும், ஆந்திராவில் இந்த பணியை அவசர கதியில் மேற்கொள்ள வேண்டாம் என்றும், இது, குடியுரிமை சரிபார்ப்புடன் தொடர்புடையது அல்ல என வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கும் பீஹாரில், வரும் அக்டோபர் - நவம்பரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பீஹார் முழுதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ளும்படி, கடந்த ஜூன் 23ல் தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.


'தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கையால் தகுதியுள்ள லட்சக்கணக்கான வாக்காளர்களின் ஓட்டுரிமை பறிக்கப்படும்' என, ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டன.

கடிதம்




விசாரித்த உச்ச நீதிமன்றம், பீஹாரில் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு தடை விதிக்க மறுத்ததோடு, ரேஷன், ஆதார் ஆவணங்களையும் பரிசீலிக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை செய்தது.



இதற்கிடையே, பீஹாரை அடிப்படையாக வைத்து, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள தயாராக இருக்கும்படி, அனைத்து மாநில தலைமை தேர்தல்
அதிகாரிகளுக்கு, கடந்த 5ல் தலைமை தேர்தல் கமிஷன் கடிதம் எழுதியது.


இந்நிலையில், டில்லியில் நேற்று, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார், தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோரை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த லோக்சபா எம்.பி., லாவு ஸ்ரீ கிருஷ்ண தேவராயலு, அக்கட்சி மாநில தலைவர் பல்லா ஸ்ரீனிவாச ராவ் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.
அப்போது, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக அவர்கள் கடிதம் வழங்கினர்.

அதன் விபரம்: சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான நோக்கம் வரையறுக்கப்பட வேண்டும். இந்த பணியின் போது வாக்காளர் பட்டியலில் திருத்தம் அல்லது சேர்க்கை மட்டுமே நடக்க வேண்டும். இந்த பணி குடியுரிமை சரிபார்ப்புடன் தொடர்புடையது அல்ல என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

அவசர கதி



மேலும், சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான உண்மையான நோக்கத்தை தேர்தல் கமிஷன் தெளிவுபடுத்த வேண்டும். வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள வாக்காளர்களை, மீண்டும் அடையாளத்தை நிரூபிக்கும்படி கட்டாயப்படுத்தக் கூடாது. ஆந்திராவில், 2029ல் தான் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. அதனால் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை கடைசி நேரத்தில் அவசர கதியில் மேற்கொள்ள வேண்டாம்.


போதுமான அவகாசம் இருப்பதால், முடிந்தவரை இந்த பணியை விரைவில் துவங்க வேண்டும்.
புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த நபர்களுக்கு, அவர்களின் தற்காலிக முகவரி அறிவிப்புகளை ஆவணமாக ஏற்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகளை அடையாளம் காண, தலைமை கணக்கு தணிக்கையாளரின் கீழ் மூன்றாம் தரப்பு தணிக்கையை நடத்த வேண்டும்.



வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உறுதிப்படுத்த ஆதாரை பயன்படுத்தலாம். ஒரே மாதிரியான எண்ணுடன் வாக்காளர் அட்டை உருவாவதை தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்தலாம். இந்த பணிகளில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பூத்-முகவர்கள் கட்டாயமாக ஈடுபட வேண்டும் இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில் பீஹார் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், ஆந்திராவில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் போது, பீஹாரை போல, தேர்தல் கமிஷனின் நடைமுறை இருக்கக் கூடாது என்பதை, தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான தெலுங்கு தேசம் தெளிவாக எடுத்துரைத்துள்ளது.


- நமது சிறப்பு நிருபர் -

Advertisement