நான்காவது சுற்றில் ஹரிகா * செஸ் உலக கோப்பையில் அபாரம்

பதுமி: உலக கோப்பை செஸ் தொடரின் நான்காவது சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் ஹரிகா.
ஜார்ஜியாவில் பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் நடக்கிறது. 46 நாடுகளில் இருந்து 107 பேர் பங்கேற்கின்றனர். 'டாப்-3' இடம் பெறுபவர்கள், உலக சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ்) பங்கேற்கலாம்.
'நாக் அவுட்' முறையிலான இத்தொடரின் நான்காவது சுற்று நடந்தது. இந்தியாவின் 'சீனியர்' வீராங்கனை ஹரிகா, கிரீசின் ஸ்டாவ்ரவுலாவை சந்தித்தார். முதல் இரு போட்டி 'டிரா' ஆக, வெற்றியாளரை முடிவு செய்ய 'டை பிரேக்கர்' நடந்தது. இதன் முதல் இரு போட்டி 'டிரா' ஆனது. 3வது போட்டியில் ஹரிகா வெற்றி பெற்றார். அடுத்து 4வது போட்டியில் ஹரிகா, 28 நகர்த்தல் வரை பின்தங்கி இருந்தார். 29 வது நகர்த்தலில் ஸ்டாவ்ரவுலா செய்த தவறான நகர்த்தல் காரணமாக, போட்டியின் முடிவு தலைகீழானது. ஹரிகா வெற்றி பெற்றார். முடிவில் 4.0-2.0 என வென்ற ஹரிகா, 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் வைஷாலி, அமெரிக்காவின் காரிசா மோதினர். 'டை பிரேக்கர்' வரை சென்ற இப்போட்டியில் வைஷாலி 4.0-2.0 என வென்றார்.
நான்கு வீராங்கனைகள்
இதையடுத்து செஸ் உலக கோப்பை தொடரின் 4வது சுற்றுக்கு, முதன் முறையாக இந்தியாவின் நான்கு வீராங்கனைகள் (ஹரிகா, ஹம்பி, வைஷாலி, திவ்யா) தகுதி பெற்றனர். இதற்கு முன் 2023ல் 2 பேர் (ஹரிகா, ஹம்பி) 4வது சுற்றில் பங்கேற்றனர்.

Advertisement