ஒடிஷாவில் தீக்குளித்த மாணவி மரணம்: எதிர்க்கட்சிகள் நாளை பந்த் அறிவிப்பு

35

புவனேஸ்வர்: ஒடிஷாவின் பாலசோரில் பஹீர் மோகன் கல்லுாரி உள்ளது. இங்கு, பி.எட்., இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவியை, பேராசிரியரும் துறை தலைவருமான சமீர் குமார் சாஹு என்பவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.


மேலும், தன் ஆசைக்கு இணங்காவிட்டால் தேர்வில் பெயில் ஆக்கி எதிர்காலத்தை சிதைத்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, இது குறித்து கல்லுாரி புகார் குழுவில் கடந்த 1ம் தேதி மனு அளித்தார்.


அவர்கள், ஒரு வாரத்தில் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்காததால், அந்த மாணவியும் சில மாணவர்களும் கல்லுாரி நுழைவாயில் முன் பேராசிரியருக்கு எதிராக கடந்த 12ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது திடீரென அந்த மாணவி கல்லுாரி முதல்வர் அறையை நோக்கி பெட்ரோல் கேனுடன் சென்று, தன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். அவரை காப்பாற்ற சென்ற இரண்டு மாணவர்களும் தீக்காயமடைந்தனர்.


இது தொடர்பான புகாரில் பேராசிரியர் சமீர் குமார் சாஹு மற்றும் முதல்வர் திலீப் கோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, 95 சதவீத தீக்காயங்களுடன் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.


இச்சம்பவம் மாநிலம் முழுதும், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், மாணவியின் இறப்புக்கு முதல்வர் மோகன் சரண் மஜி இரங்கலை தெரிவித்துள்ளதுடன், அம்மாணவியின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.


முன்னதாக, உயிரிழந்த மாணவிக்கு உரிய நீதி கிடைக்க வலியுறுத்தி காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மாநிலம் முழுதும் நாளை பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.

திட்டமிட்ட அநீதி



கல்லுாரி மாணவியின் தற்கொலை முடிவு, அரசு நிர்வாகத்தின் தோல்வியை காட்டுகிறது. இது விபத்து அல்ல; அத்தருணத்தில் மாணவிக்கு உதவ யாரும் முன்வராதது மிகுந்த வேதனையை அளிக்கிறது. நீதிக்காக போராடிய மாணவி, இறுதியில் தன் உயிரை மாய்த்துள்ளார். இந்த விவகாரத்தில் நீதி கிடைக்க அமைச்சர், எம்.பி., என பலரை சந்தித்து அவர் முறையிட்டுள்ளார். இதில், யாரேனும் ஒருவர் நடவடிக்கை எடுத்திருந்தால் கூட, அம்மாணவியை காப்பாற்றியிருக்கலாம். அரசின் அலட்சியத்தால் அவர் உயிரிழந்துள்ளார். இது அந்த மாணவிக்கு திட்டமிட்டு இழைக்கப்பட்ட அநீதி.

- நவீன் பட்நாயக்

முன்னாள் முதல்வர், பிஜு ஜனதா தளம்


உரிய பதில் வேண்டும்!



ஒடிஷாவில் கல்லுாரி மாணவி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம், பா.ஜ.,வின் அரசின் திட்டமிட்ட கொலையாகவே கருத முடியும். அவரை பாதுகாப்பதற்கு பதிலாக, அவரது குரலை அழுத்தியுள்ளது. இதுபோன்ற ஒவ்வொரு சம்பவத்திலும், குற்றவாளிகளை பாதுகாக்கும் முயற்சியில் பா.ஜ., அரசு ஈடுபட்டு வருகிறது. ஒடிஷாவோ, மணிப்பூரோ, நம் நாட்டின் மகள்கள் தீக்குளிக்கும் நிலையில், பிரதமர் அமைதியாக உள்ளார். நாடே அவரது பதிலுக்காக காத்திருக்கிறது.

-- ராகுல், லோக்சபா எதிர்க்கட்சி

தலைவர், காங்கிரஸ்

Advertisement