27 ரன்னில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ் * 6 விக்கெட் சாய்த்தார் ஸ்டார்க்

கிங்ஸ்டன்: கிங்ஸ்டன் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி 27 ரன்னுக்கு சுருண்டது. 9 ரன் மட்டும் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார் ஸ்டார்க். ஆஸ்திரேலியா 'ஹாட்ரிக்' வெற்றி பெற்று, கோப்பை கைப்பற்றியது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா, 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. மூன்றாவது டெஸ்ட், கிங்ஸ்டனில் பகலிரவு போட்டியாக நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 225, வெஸ்ட் இண்டீஸ் 143 ரன் எடுத்தன. இரண்டாவது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்சில் 99/6 ரன் எடுத்து இருந்தது.
அடுத்து நடந்த மூன்றாவது நாள் ஆட்டத்தில் கேமரான் கிரீன் (42), ஷமர் ஜோசப் பந்தில் போல்டானார். அடுத்து வந்த கேப்டன் கம்மின்ஸ், 5 ரன் மட்டும் எடுத்து அல்ஜாரி ஜோசப் பந்தில் வீழ்ந்தார். மறுபக்கம் போலந்தை (1) போல்டாக்கினார் ஷமர் ஜோசப். கடைசியில் ஹேசல்வுட் (4) அவுட்டாக, ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்சில் 121 ரன்னுக்கு சுருண்டது.
ஸ்டார்க் மிரட்டல்
இரண்டாவது இன்னிங்சில் 204 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ். மறுபக்கம் தனது 100 வது டெஸ்டில் பங்கேற்ற மிட்சல் ஸ்டார்க் போட்டுத் தாக்கினார். இவரது முதல் பந்தில் கேம்பெல் (0) அவுட்டானார். 5, 6வது பந்தில் ஆண்டர்சன், பிரண்டன் கிங் 'டக்' அவுட்டாகினர். ரன் கணக்கைத் துவக்கும் முன், 3 விக்கெட்டுகளை இழந்தது வெஸ்ட் இண்டீஸ்.
தனது 3வது ஓவரின் முதல் பந்தில் மிக்கைலை (4) வெளியேற்றிய ஸ்டார்க், டெஸ்ட் அரங்கில் 400 வது விக்கெட் சாய்த்தார். தொடர்ந்து 3வது பந்தில் ஷாய் ஹோப்பை (2) அவுட்டாக்கினார். ஹேசல்வுட் 'வேகத்தில்' சேஸ் (0) அவுட்டாக, வெஸ்ட் இண்டீஸ் அணி 11 ரன்னில் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 7வது விக்கெட்டுக்கு இணைந்த அல்ஜாரி ஜோசப், கிரீவ்ஸ் ஜோடி 14 ரன் சேர்க்க, டெஸ்ட் அரங்கின் குறைந்த ஸ்கோரை (26) சமன் செய்தது.
போலந்து 'ஹாட்ரிக்'
போட்டியின் 14வது ஓவரை வீசிய போலண்ட், முதல் 3 பந்தில் கிரீவ்ஸ் (11), ஷமர் ஜோசப் (0), வாரிகனை (0) வெளியேற்றி, 'ஹாட்ரிக்' சாதனை படைத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 14.3 ஓவரில், 27 ரன்னில் சுருண்டது. 176 ரன்னில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, 3-0 என தொடரை முழுமையாக வென்றது.
ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் 6 (9 ரன்), போலந்து 3 (2 ரன்) விக்கெட் சாய்த்தனர்.

9 ரன்... 6 விக்கெட்

தனது 100 வது டெஸ்டில் பங்கேற்ற ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க், 7.3 ஓவர் பந்து வீசி, 9 ரன் மட்டும் கொடுத்து 6 விக்கெட் சாய்த்தார். இதற்கு முன் இலங்கையின் முரளிதரன், தனது 100 வது டெஸ்டில் 54 ரன்னுக்கு 6 விக்கெட் சாய்த்ததே அதிகம்.

15 பந்தில், 5 விக்கெட்
டெஸ்ட் வரலாற்றில் அதிவேகமாக 5 விக்கெட் சாய்த்த பவுலர் ஆனார் ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க். கிங்ஸ்டன் டெஸ்டில் இவர், 15 பந்து இடைவெளியில் 5 விக்கெட் வீழ்த்தினார்.
* ஆஸ்திரேலிய பவுலர்கள் எர்னி தோஷாக் (1947, எதிர்-இந்தியா, பிரிஸ்பேன்), போலந்து (2021, எதிர்-இங்கிலாந்து, மெல்போர்ன்) இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் (2015, ஆஸி., நாட்டிங்காம்) தலா 19 பந்தில் இதுபோல சாதித்தனர்.

6 பேட்டர்... 6 ரன்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் 'டாப்-6' பேட்டர்கள் நேற்று மொத்தம் 6 ரன் (0, 4, 0, 0, 0, 2) மட்டும் எடுத்தனர். டெஸ்ட் அரங்கில் முதல் 6 வீரர்கள் இணைந்து எடுத்த குறைந்த ஸ்கோர் ஆனது. முன்னதாக சிட்னி டெஸ்டில் (1888) இங்கிலாந்துக்கு எதிராக, ஆஸ்திரேலிய அணியின் 'டாப்-6' வீரர்கள் 12 ரன் எடுத்திருந்தனர்.

குறைந்த ஸ்கோர்
டெஸ்ட் அரங்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி (27 ரன்) தனது குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது. முன்னதாக 2004ல் கிங்ஸ்டனில் 47 ரன்னில் (இங்கிலாந்து) சுருண்டு இருந்தது.
* வெஸ்ட் இண்டீஸ் அணி இரு இன்னிங்சிலும் (143+27) சேர்த்து குறைந்த ஸ்கோரை (170) பதிவு செய்தது. முன்னதாக 1957ல் 175 ரன் (எதிர்-இங்கிலாந்து) எடுத்திருந்தது.

7 'டக்'
வெஸ்ட் இண்டீஸ் அணியின் 7 பேட்டர்கள் 'டக்' அவுட்டாகினர். டெஸ்டில் 7 பேர், இதுபோல அவுட்டானது இது தான் முதன் முறை. முன்னதாக சமீபத்தில், இங்கிலாந்தின் 6 பேட்டர்கள் (எதிர்-இந்தியா) 'டக்' அவுட்டாகி இருந்தனர்.

இரண்டாவது இடம்
வெஸ்ட் இண்டீஸ் எடுத்த 27 ரன், டெஸ்ட் அரங்கின் இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோர் ஆனது. டெஸ்டில் 'டாப்-6' குறைந்த ஸ்கோர்
அணி எதிரணி ஆண்டு ஸ்கோர்
நியூசிலாந்து இங்கிலாந்து 1955 26
வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியா 2025 27
தென் ஆப்ரிக்கா இங்கிலாந்து 1896 30
தென் ஆப்ரிக்கா இங்கிலாந்து 1924 30
தென் ஆப்ரிக்கா இங்கிலாந்து 1899 35
தென் ஆப்ரிக்கா ஆஸ்திரேலியா 1932 36
ஆஸ்திரேலியா இங்கிலாந்து 1902 36
இந்தியா ஆஸ்திரேலியா 2020 36

402 விக்கெட்
ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்டில் 400 விக்கெட்டுகள் சாய்த்த நான்காவது பவுலர் ஆனார் ஸ்டார்க். தவிர தென் ஆப்ரிக்காவின் ஸ்டைனுக்குப் (16,634) பின் குறைந்த பந்தில் இம்மைல்கல்லை எட்டிய இரண்டாவது பவுலர் ஆனார் ஸ்டார்க் (19,062).
* ஒட்டுமொத்தமாக டெஸ்டில் அதிக விக்கெட் சாய்த்த பவுலர்களில் ஸ்டார்க், 18 வது இடம் பிடித்தார். முதல் இரு இடத்தில் இலங்கையின் முரளிதரன் (800 விக்.,), ஆஸ்திரேலியாவின் வார்ன் (708) உள்ளனர்.
இதன் விபரம்:
வீரர் டெஸ்ட் விக்கெட்
வார்ன் 145 708
மெக்ராத் 124 563
லியான் 139 562
ஸ்டார்க் 100 402
லில்லி 70 355

Advertisement