ஜடேஜா 'ரிஸ்க்' எடுத்திருக்கலாமா... * என்ன சொல்கிறார் கும்ளே


புதுடில்லி: ''லார்ட்ஸ் டெஸ்டில் ஜடேஜா கொஞ்சம் 'ரிஸ்க்' எடுத்திருக்கலாம். ஜோ ரூட், பஷிர், வோக்ஸ் பந்துகளை குறி வைத்து விளாசி இருக்கலாம்,'' என அனில் கும்ளே தெரிவித்தார்.
லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த பரபரப்பான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி, இங்கிலாந்திடம் 22 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது. 193 ரன்னை விரட்டிய இந்திய அணி, ஐந்தாவது நாள் ஆட்டத்தில் 82/7 ரன் எடுத்து தவித்தது. தனிநபராக போராடிய ரவிந்திர ஜடோஜாவுக்கு (61 ரன்*, 181 பந்து), பும்ரா (5 ரன், 54 பந்து), சிராஜ் (4 ரன், 30 பந்து) கைகொடுத்தனர். ஆனாலும் சோயப் பஷிர் 'சுழலில்' பந்தில் சிராஜ் துரதிருஷ்டவசமாக போல்டாக, இந்தியாவின் வெற்றி நழுவியது. இரண்டாவது இன்னிங்சில் 170 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ளே கூறியது:
லார்ட்ஸ் போட்டி, எனக்கு சென்னையில் (1999) நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டை நினைவுபடுத்தியது. இதில் முதுகுப்பிடிப்பை பொருட்படுத்தாமல் ஆடிய சச்சின், 136 ரன் எடுத்தார். கடைசியில் சக்லைன் முஷ்டாக் 'சுழலில்' ஸ்ரீநாத் போல்டாக, 12 ரன்னில் இந்தியா தோல்வி அடைந்தது. இதே போன்று சிராஜும் அவுட்டாக, ஜடேஜா செய்வதறியாது திகைத்து நின்றார். இந்திய அணியை வெற்றிக்கு அருகில் அழைத்து வந்தார். ஆனால், இங்கிலாந்து சரியாக திட்டம் வகுத்து வெற்றியை பறித்துச் சென்றது.
துணிச்சல் ஆட்டம்
எந்த பவுலரை குறி வைப்பது என ஜடேஜா முன்கூட்டியே யோசித்திருக்க வேண்டும். ஜோ ரூட், வோக்ஸ், சோயப் பஷிர் பந்துகளை விளாசி இருக்கலாம். இவர் தான் 'ரிஸ்க்' எடுத்திருக்க வேண்டும். மாறாக பஷரின் ஓவரை சிராஜ் சந்திக்க அனுமதித்திருக்க கூடாது. இருப்பினும் ஜடேஜா துணிச்சலாக போராடினார். 82/7 என்ற நிலையில் இருந்து, 170 ரன்னுக்கு அணியை கொண்டு வந்தது பெரிய விஷயம். மற்ற பேட்டர்கள் ஏமாற்றம் அளித்தனர். சிராஜை பொறுத்தவரை பல சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. பஷிர் ஓவருக்கு முன் ஆர்ச்சர் வீசிய பந்து இவரது இடது தோள்பட்டையில் பலமாக தாக்கியது. இதனால் சுருண்டு விழுந்த இவர், கடும் வலியால் அவதிப்பட்டார். இவருக்கு மிக அருகில் 'பீல்டர்களை' நிறுத்தியும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் பதட்டமான இவர், பஷிர் வலையில் சிக்கினார்.
உதிரி தொல்லை
இப்போட்டியில் இந்திய அணி அதிகளவில் உதிரிகளை விட்டுக் கொடுத்தது வினையாக அமைந்தது. முதல் இன்னிங்சில் 31, இரண்டாவது இன்னிங்சில் 32 என 63 உதிரிகளை வாரி வழங்கினர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
முதல் 3 போட்டிகளிலும் இரு அணிகளும் கடைசி வரை போராடின. இங்கிலாந்து 2-1 என முன்னிலை பெற்றாலும், இரு அணிகளும் சமபலத்தில் காணப்பட்டன. ஒட்டுமொத்தமாக உயர்தர டெஸ்ட் போட்டிகளை காண முடிந்தது.
இவ்வாறு கும்ளே கூறினார்.

Advertisement