ஹைதராபாதில் பாழடைந்த வீட்டுக்குள் இறந்தவரின் எலும்புக்கூடு 10 ஆண்டுகளுக்கு பின் கண்டெடுப்பு

1

ஹைதராபாத்:தெலுங்கானாவின் ஹைதராபாதில், பாழடைந்த வீட்டுக்குள் விழுந்த கிரிக்கெட் பந்தை எடுக்க சென்றபோது, 10 ஆண்டுகளுக்கு முன் இறந்த நபரின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைதளம்



தெலுங்கானாவின் ஹைதராபாதில் உள்ள நம்பள்ளி என்ற இடத்தை சேர்ந்த இளைஞர், கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கிருந்த பாழடைந்த வீட்டுக்குள் பந்து விழுந்தது. அதை எடுப்பதற்காக அவர் வீட்டுக்குள் சென்றார்.

அங்கே, மனித எலும்புக்கூடு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதை தன் மொபைல் போனில் படம் பிடித்து, சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.

இதைப் பார்த்த போலீசார் தடயவியல் நிபுணர்களுடன், அந்த பாழடைந்த வீட்டுக்கு சென்றனர்.

அங்கிருந்த சமையல்அறையில் குப்புற படுத்தநிலையில் எலும்புக்கூடு இருப்பதை கண்டனர். அது மட்கும் நிலையில் இருந்தது. அதை சுற்றிலும் சமையல் பாத்திரங்கள் சிதறிக்கிடந்தன.

மேலும் பழைய மாடல், 'நோக்கியா' மொபைல் போன் ஒன்றும் இருந்தது. 2016ல் பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளும், தலையணை அடியில் இருந்து எடுக்கப்பட்டன. 'பேட்டரி' செயலிழந்த அந்த மொபைல் போனை போலீசார் பழுதுபார்த்து உயிர் கொடுத்தனர். அதில், 2015ல், 84, 'மிஸ்டு கால்'கள் வந்தது பதிவாகி இருந்தது.

பரிசோதனை



இது குறித்து, போலீஸ் உதவி கமிஷனர் கிஷன் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உயிரிழந்தவரின் பெயர் அமீர் கான். அவர் வசித்த வீடு அவரது தந்தை முனீர் கான் என்பவருக்கு சொந்தமானது. அவருக்கு, 10 பிள்ளைகள். அதில் அமீர் 3வது மகன். அவர் தனியாக அந்த வீட்டில் வசித்துள்ளார். சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. அவருக்கு 50 வயது இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

அவர், 10 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்திருக்க கூடும் என, தடயவியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

உறவினர்கள், நண்பர்கள் தொடர்பு கொள்ளாததால் அவரது மரணம் குறித்து யாருக்கும் தெரியவில்லை. அந்த இடத்தில் ரத்தக் கறை எதுவும் தென்படவில்லை. அவர் இயற்கையாக இறந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

எலும்புக்கூட்டின் விரலில் இருந்த மோதிரம், அணிந்திருந்த அரைக்கால் சட்டையை வைத்து, அது அமீர் கான் தான் என்பதை அவரது சகோதரர் ஷதாப் உறுதி செய்துள்ளார். எனினும், இறந்தவரின் அடையாளத்தை உறுதி செய்ய பரிசோதனைகள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement