ஒகேனக்கல்லில் 20 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

ஒகேனக்கல்,ஒகேனக்கல்லில், 20 நாட்களுக்கு பின் நேற்று, காவிரியாற்றில் குளிக்க, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக பெய்த மழையால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, அங்குள்ள அணைகள் நிரம்பின. அணை பாதுகாப்பு கருதி கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியாற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு, 18,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை, 4:00 மணிக்கு, 16,000 கன அடியாக சரிந்தது.

இதையடுத்து, 20 நாட்களுக்கு பின் நேற்று மாலை, 5:00 மணிக்கு, காவிரியாற்றில் குளிக்க தர்மபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

ஆனால், மெயின் பால்ஸ்க்கு செல்லும் நடைப்பாதை பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். நேற்று முன்தினம் காலையிலிருந்து பரிசல் இயக்க, போடப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு, பரிசல் இயக்கப்படுகிறது.
ஒகேனக்கல்லில் கடந்த, 18 நாட்களாக பரிசல் இயக்க, குளிக்க தடையால், மசாஜ் தொழிலாளர்கள், சமையல் செய்யும் பெண்கள், பரிசல் ஓட்டிகள், சிறு வியாபாரிகள் என, பல தரப்பினர் வாழ்வாதாரம் இழந்தனர்.
அதற்கு இழப்பீடு வழங்கக்கோரி, நேற்று மாலை, மா.கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நடத்திய நிலையில், ஒகேனக்கல்லில் குளிக்க அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement