மாற்றுத்திறனாளி கைதிகளுக்கு வசதிகள் தமிழக சிறை துறைக்கு கோர்ட் உத்தரவு

புதுடில்லி: சிறையில் அடைக்கப்படும் போதே, மாற்றுத்திறனாளி கைதிகளை அடையாளம் காணும்படி தமிழக சிறைத் துறைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அனைத்து சிறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற உட்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான வழக்கறிஞர் எல்.முருகானந்தம், நிலத்தகராறு தொடர்பான வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வசதிகள் இல்லாததால் கடும் அவதிப்பட்ட அவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இழப்பீடு



விசாரித்த உயர் நீதிமன்றம், அவருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எல்.முருகானந்தம் மேல் முறையீடு செய்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:

தேவை மற்றும் குறைபாட்டை தெரிவிக்க ஒவ்வொரு கைதிக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மாற்றுத்திறனாளி அல்லது திருநங்கை கைதிகளின் கண்ணியம், பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

சிறை விதிகள் குறித்து மாற்றுத்திறனாளி கைதிகள் தெரிந்துகொள்ள, பிரெய்லி, சைகை மொழி வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

அனைத்து சிறை வளாகங்களிலும் சக்கர நாற்காலி வசதிகள், சாய்வு தளங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளி கைதிகளுக்கு பிசியோதெரபி, பேச்சு சிகிச்சை உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட வேண்டும்.

பயிற்சி



தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வசதிகள் உள்ளனவா என்பது குறித்து, சமூகநலத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ஆறு மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளை பாகுபாடு இல்லாமல் நிவர்த்தி செய்ய, அனைத்து சிறை மருத்துவ அதிகாரிகள் மற்றும் சிறை ஊழியர்களுக்கு போதுமான பயிற்சி அளிக்க வேண்டும். மாற்றுத்திறனாளி கைதிகளுக்கு அவர்களின் உடல்நலம் மற்றும் உணவு தேவைகளுக்கு ஏற்ப, சத்தான உணவு வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement