ஒரு வழியாக பழுது நீக்கியாச்சு; ஜூலை 23ல் நாடு திரும்புகிறது பிரிட்டீஷ் போர் விமானம்!

திருவனந்தபுரம்: தொழில்நுட்பக்கோளாறு காரணமாக திருவனந்தபுரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பிரிட்டீஷ் போர் விமானம் ஜூலை 23ல் திரும்பிச் செல்லும் என பிரிட்டீஷ் உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டீஷ் கடற்படையின் எப் 35 பி போர் விமானம் ஜூன் 14ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியது. எரிபொருள் பிரச்னையால் தரை இறங்கிய விமானம் பழுதாகி நின்றுவிட்டது.
இதனை மீண்டும் பறக்க வைக்க தொழில்நுட்ப நிபுணர்கள் நீண்ட நேரம் போராடியும் முயற்சி கை கொடுக்கவில்லை. அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி நாட்டு ராணுவத்தினர் மட்டுமே வைத்திருக்கும் இந்த அதிநவீன போர் விமானம், உலகில் மிகுந்த விலை மதிப்பு கொண்டதாக கருதப்படுகிறது.
பழுதான நிலையில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நிற்கும் விமானம், கேலி, கிண்டலுக்கு ஆளானது. போர் விமானத்தின் படத்தை மீம்ஸ் வெளியிட்டு நெட்டிசன்கள் தாறுமாறாக விமர்சித்தனர். விமானத்தின் பழுது சரி செய்வதற்காக, பிரிட்டீஷ் விமானப்படை பொறியாளர்கள் 24 பேர் கொண்ட குழு, திருவனந்தபுரம் வந்துள்ளது. அவர்கள் ஒரு வாரம் போராடி, விமானத்தை பழுது நீக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கிய கோளாறுகள் சரி செய்யப்பட்டு விட்டன. போர் விமானம் ஜூலை 23ம் தேதி தாய் நாட்டுக்கு கொண்டு செல்லப்படும் என பிரிட்டீஷ் உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், விமானம் பறந்து செல்லுமா அல்லது சரக்கு விமானம் உதவியுடன் கொண்டு செல்லப்படுமா என்பது முடிவு செய்யப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.




