ஜார்க்கண்ட் வனப்பகுதியில் சி.ஆர்.பி.எப். ரெய்டு: 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

1

பொகாரோ: ஜார்க்கண்டில் நக்லைட்டுகள் இருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தில் ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.


பொகாரோ மாவட்டம், கோமியோ போலீஸ் எல்லைக்குட்பட்ட பிர்ஹோர்டெரா வனப்பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் வழக்கமான தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த நக்லைட்டுகள் திடீரென பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.


பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலில் இறங்கினர். இரு தரப்பிலும் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையில் ஒருவர் படுகாயம் அடைந்தார். கொல்லப்பட்டவர்களில் ஒருவர் நச்சல் சீருடையும், மற்றொருவர் சாதாரண உடையிலும் இருந்துள்ளனர்.


இந்த தேடுதல் வேட்டையில் நக்சலைட்டுகள் விட்டுச் சென்ற ஏகே 47 ரக துப்பாக்கி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


இதுகுறித்து பொகாரோ எஸ்.பி. ஹர்விந்தர் சிங் கூறுகையில், இன்னமும் நக்லைட்டுகளை தேடும் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறோம் என்றார்.


ஜார்க்கண்ட் ஐ.ஜி., மைக்கேல் ராஜ் கூறுகையில், ஒரு ராணுவ வீரர் படுகாயம் அடைந்துள்ளார். நக்சலைட்டுகள் பற்றி முக்கிய தகவல்கள் கிடைத்துச் சென்றோம் என்றார்.

Advertisement