'விண்வெளிக்கு மனிதரை அனுப்பும் திட்டத்தில் சுபான்ஷூ சுக்லா முக்கிய பங்கு வகிப்பார்'
கோவை: ''சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்ட, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா பூமிக்கு திரும்பியதால், மனிதரை விண்வெளிக்கு அனுப்பும் திட்டங்களில், அவருடைய பங்கு முக்கியமானதாக இருக்கும்,'' என, சந்திரயான்-1 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
கோவையில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: உலகளவில், 10 லட்சத்துக்கும் அதிகமான பொறியாளர்கள் உருவாகும் நாடாக இந்தியா திகழ்கிறது. இதில், 17 சதவீத இளைஞர்கள் தமிழகத்தில் இருந்து வெளிவருகின்றனர்.
மருத்துவத் துறையிலும் இன்ஜினியர்களுக்கு பெரும் வாய்ப்புகள் உள்ளன. அதுபோல், விண்வெளித் துறையிலும் இந்தியா தற்போது, உலகில் முதல் மூன்று முக்கிய நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது.
மனிதன் விண்ணுக்குச் செல்வதும், நிலவுக்கு பயணம் செய்வதும் போன்ற முன்னேற்றங்களில் இந்தியாவின் பங்கு சிறப்பாக இல்லை.
ஆனால் 'ககன்யான்', 'சந்திரயான்' போன்ற திட்டங்கள் வாயிலாக, இந்தியா அந்த நிலையை நோக்கி பயணிக்கிறது. சுபான்ஷூ சுக்லா பூமிக்கு திரும்பியதால், அடுத்தகட்ட விண்வெளி பயணங்களில், குறிப்பாக மனிதரை விண்வெளிக்கு அனுப்பும் திட்டங்களில், அவருடைய பங்கு முக்கியமானதாக இருக்கும்.இன்று விண்வெளிப் பயணங்கள், வர்த்தக நோக்கிலும் விரிவடைகின்றன. இதற்கான பயிற்சிகளை நாம் வெளிநாடுகளுக்குச் சென்று வழங்குகிறோம். இத்தகைய திட்டங்களை நாமே வடிவமைப்பதற்கான அவசியம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.