பலவீனப்படுத்த பார்க்கும் பா.ஜ.,; அ.தி.மு.க.,வுக்கு அனுதாபப்படுகிறார் திருமா

16

சென்னை: '' வலுவாக இருக்கும் அ.தி.மு.க.,வை கூட்டணி ஆட்சி என பேசி பலவீனப்படுத்த பா.ஜ., முயற்சி செய்கிறது,'' என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

நிருபர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் கூறியதாவது:
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கோட்பாடு முக்கியம். பா.ஜ.,வின் கொள்கை அவர்களுக்கு அதை தாண்டி நட்பு இருப்பது தவறு இல்லை. கே.பி.ராமலிங்கம் நன்கு அறிமுகமானவர். நன்கு பழக்கமானவர். தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த போது பார்லிமென்ட் மைய மண்டபத்தில் சந்தித்துள்ளோம்.

அந்த நட்பு அடிப்படையில் சந்திக்க வந்தால் வரவேற்போம். அதில் எந்த தயக்கமும் இல்லை. ஆனால், பா.ஜ., கொள்கை அம்பேத்கர் குறிக்கோள்களுக்கு நேர் முரணானது என்பதை நாங்கள் புரிந்து இருக்கிறோம். அதில் உறுதியாக இருக்கிறோம்.

தி.மு.க., உடன் உள்ளதால், நாங்கள் பா.ஜ.,வை எதிர்ப்பதாக நினைக்கிறார்கள். ஆனால், உண்மை அது அல்ல. தி.மு.க., கூட்டணி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி பா.ஜ., கொள்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. நாங்கள் தனியாக இருந்தாலும் எதிர்ப்போம்.

அதற்கு காரணம் பா.ஜ., மீது உள்ள தனிப்பட்ட அரசியல் காரணங்கள் அல்ல. தேர்தல் அரசியல் காரணங்கள் அல்ல. அம்பேத்கரின் சமத்துவ கொள்கைகளை ஏற்று கொண்ட சமத்துவ இயக்கமாக பா.ஜ., இல்லை. அம்பேத்கரின் மதசார்பின்மைக்கு நேர் எதிரான இயக்கம் பா.ஜ.,

அதனால் பாஜ.,வை விமர்சிக்கிறோம். தி.மு.க., கூட்டணியில் இருப்பதால் பா.ஜ.,வை எதிர்க்கிறோம் என்றால், தேர்தல் அரசியலில் கூட்டணி அடிப்படையில் அமைந்துவிடும். கருத்தியல் அடிப்படையில் மதசார்பின்மைக்கு பா.ஜ., எதிரானது என்பதால், விமர்சனம்.
வேறு எந்த தனிநபர் விமர்சனமோ, தனிப்பட்ட அரசியல் காரணங்களோ கிடையாது. இந்தியாவில் மதசார்பின்மைக்கு நேர் எதிரான இயக்கமாக பா.ஜ., உள்ளதால், நாங்கள் கருத்தியல் அடிப்படையில் எதிர்க்கிறோம்.

அ.தி.மு.க.,வை நான் விமர்சிக்கவில்லை. எந்த காழ்ப்பும் இல்லை. அவர்கள் வலுவாக உள்ள போது, கூட்டணி ஆட்சி என அமித்ஷா சொல்வது என்றால், அ.தி.மு.க.,வை எவ்வளவு பலவீனமாக கருதுகிறார்கள்?

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்டி காத்த இயக்கத்தை துச்சமாக மதிக்கிறார்கள். சாதாரணமாக பேசுகிறார்கள். அவர்களிடம் கருத்து கேட்காமல்,ஒப்புதல் இல்லாமல் கூட்டணி ஆட்சி என்றால், அ.தி.மு.க.,வை பலவீனப்படுத்துவோம் என்று தானே பா.ஜ., சொல்கிறது. அது தானே அதன் பொருள்.
அப்படியென்றால் அவர்கள் கோபம் யார் மீது வர வேண்டும். யாரை கேட்டு அப்படி சொல்கிறீர்கள் என கேட்க வேண்டும்?

அ.தி.மு.க., எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களை பலவீனப்படுத்த பார்க்கிறார்கள். நீங்கள் சொல்லாமலேயே கூட்டணி ஆட்சி என சொல்வதன் மூலம் உங்களை குறைத்து மதிப்பிடுகின்றனர் என்பதை சுட்டிக்காட்டுகிறேன். அவர்கள் என் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம். அமைதியாக இருந்திருக்க வேண்டும்.
என்னை விமர்சிக்கிறார்கள் என்றால், தன் தலையிலேயே மண் அள்ளிப்போட்டு கொண்டதாக தான் பார்க்க வேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது சந்தேகத்தை எழுப்பினால் தி.மு.க., கூட்டணியில் குழப்பம் ஏற்படும். விரிசல் ஏற்படுத்தலாம் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கட்சி வளரக்கூடாது என நினைத்தவர்கள், 4 அல்லது 6 தொகுதி மட்டும் ஏன் கேட்கிறீர்கள் என்கிறார்கள். இதற்கு எங்களின் வளர்ச்சி, நலன் அவர்களின் நோக்கம் அல்ல.

எங்களின் உணர்ச்சியை தூண்டிவிட்டு வெறுப்பு வரும் என எதிர்பார்க்கிறார்கள். நாங்கள் தி.மு.க., மட்டுமே பாதுகாப்பு அரண் என பார்க்கவில்லை. மதசார்பற்ற கூட்டணியை உருவாக்கியதில் ஒவ்வொரு கட்சிக்கும் பங்கு உண்டு. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் பங்கு உண்டு. ஆனால், தி.மு.க.,வுக்காக நான் பேசுகிறேன் என திசைதிருப்புகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement