குடும்பத்துடன் ஒன்று சேர்ந்தார் சுக்லா: மகிழ்ச்சியுடன் வரவேற்ற மனைவி, மகன்

கலிபோர்னியா: சர்வதேச விண்வெளி நிலையத்தில் 15 நாட்கள் தங்கி ஆய்வு மேற்கொண்டு பூமிக்கு திரும்பிய இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா, குடும்பத்துடன் சேர்ந்தார். அவரை மனைவி மற்றும் மகன் கட்டியணைத்து வரவேற்றனர்.
அமெரிக்காவின் ஆக்சியம் ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனமம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கான பயண திட்டத்தில் ஈடுபட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷூ சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் சுபு மற்றும் போலாந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் கடந்த மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றனர்.
அங்கு 18 நாட்கள் தங்கி பல்வேறு ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டார். ஆய்வுப் பணிகளை முடித்துக் கொண்ட அவர்கள் நேற்று பூமிக்கு வந்தடைந்தனர். இந்த பயணம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை சுபான்ஷூ சுக்லாவுக்கு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து நான்கு பேரும் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அமெரிக்காவின் வான்டன்பெர்க் விண்வெளி படைதளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அக்குழுவினருக்கு அங்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர், மனைவி மற்றும் மகனுடன் ஒன்று சேர்ந்தார். விண்வெளிக்கு சென்றுவிட்டு திரும்பிய சுபான்ஷூ சுக்லாவை அவரது மனைவி காம்னா மிஸ்ரா மற்றும் மகன் ஆகியோர் மகிழ்ச்சியுடன் கட்டியணைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

