அங்கன்வாடி மையம் காக்கநல்லுாரில் சேதம்

உத்திரமேரூர்,:-காக்கநல்லூரில் சேதமடைந்துள்ள அங்கன்வாடி மையத்தை அகற்ற பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.

உத்திரமேரூர் பேரூராட்சி, காக்கநல்லுார் கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த அங்கன்வாடி மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த கட்டடம், 25 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டது.

தற்போது, முறையான பராமரிப்பு இல்லாமல் கட்டடம் சேதமடைந்து, பக்கவாட்டு சுவரில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும், மழை நேரங்களில் கட்டட கூரையில் மழைநீர் வழிந்து கீழே சொட்டுகிறது.

இதனால், அங்கன்வாடி மையத்தில் வைக்கப்பட்டுள்ள உணவு பொருட்கள், பதிவேடுகள் மழைநீரில் நனைந்து சேதமடைகின்றன.

இக்கட்டடம், எந்த நேரத்திலும் இடிந்து விழும் என்பதால், பெற்றோர் தினமும் குழந்தைகளை தயக்கத்துடன் அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி வருகின்றனர்.

எனவே, சேதமடைந்துள்ள அங்கன்வாடி மைய கட்டடத்தை அகற்ற, பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க, பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement